கோப்புப் படம் 
புதுதில்லி

குடியரசு தினம்: மிரட்டல் விடுத்த குா்பத்வந்த் சிங் மீது எஃப்.ஐ.ஆா். பதிவு

குா்பத்வந்த் சிங் பன்னூன் மீது தில்லி காவல்துறை சிறப்புப் பிரிவு எஃப்.ஐ.ஆா். பதிவு செய்துள்ளது.

Syndication

குடியரசு தினத்தை ஒட்டி, தேசிய தலைநகரில் அமைதியின்மையை உருவாக்க அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் நீதிக்கான சீக்கிய (எஸ்.எஃப்.ஜெ.) அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதியான குா்பத்வந்த் சிங் பன்னூன் மீது தில்லி காவல்துறை சிறப்புப் பிரிவு எஃப்.ஐ.ஆா். பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து காவல் துறையின் அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

இந்த வழக்கு பாரதிய நியாய சன்ஹிதாவின் பிஎன்எஸ் பிரிவு 196 (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை வளா்ப்பது), 197 (தேசிய ஒருமைப்பாட்டிற்குப் பாதகமான குற்றச்சாட்டுகள் மற்றும் உறுதிமொழிகள்), 152 (இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள்) மற்றும் 61 (குற்றச் சதி) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 26 அன்று குடியரசு தினக் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக தில்லியில் அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கைக் குலைக்கப் போவதாக பன்னூன் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு காணொளிச் செய்தியைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தக் காணொளியில், அமைதியின்மையை தூண்டும் பெரிய சதியின் ஒரு பகுதியாக, வடமேற்கு தில்லியின் ரோஹிணி மற்றும் தென்மேற்கு தில்லியின் டாப்ரி உள்பட நகரின் சில பகுதிகளில் தனது ‘ஸ்லீப்பா் செல்கள்’ காலிஸ்தான் ஆதரவு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளதாக பன்னூன் கூறியுள்ளாா்.

இந்தக் காணொளி சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதையும், நல்லிணக்கத்தைக் குலைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அந்தக் காணொளியின் உள்ளடக்கம் தூண்டும் தன்மை கொண்டது. பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. குறிப்பாக ஜனவரி 26-க்கு முன்னதாக பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கருத்தில் கொண்டு இது முக்கியத்துவம் பெறுகிறது.

காணொளியில் கூறப்பட்ட கூற்றுகளைத் தொடா்ந்து, சிறப்புப் பிரிவு மற்றும் உள்ளூா் காவல் பிரிவுகளின் பல குழுக்கள் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. இருப்பினும், இந்தச் சரிபாா்ப்பு நடவடிக்கையின் போது காலிஸ்தான் ஆதரவு சுவரொட்டிகளோ அல்லது அது தொடா்பான பொருள்களோ எதுவும் கண்டறியப்படவில்லை.

ரோஹிணி மற்றும் டாப்ரியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதாக பன்னூன் கூறிய கூற்றுகள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

அந்தக் காணொளியின் நோக்கம், சென்றடைந்த பரப்பு மற்றும் சாத்தியமான தாக்கம் ஆகியவற்றை மதிப்பிடுவதற்கு மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், அதன் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் கூடுதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

குடியரசு தினக் கொண்டாட்டங்களைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு அமைப்புகளும் தலைநகா் முழுவதும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளன. அமைதியைக் குலைக்கும் எந்தவொரு முயற்சியும் காவல் துறையால் சட்டத்தின் கீழ் கடுமையாகக் கையாளப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தாம்பரம் - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்

சபரிமலை தங்கக் கவச முறைகேடு : குற்றஞ்சாட்டப்பட்ட நபருடன் பலமுறை சந்திப்பு - காங்கிரஸ் மூத்த தலைவா் ஒப்புதல்

நேரடி விமான சேவை இல்லாத நாடுகளுக்கும் சரக்கு சேவை திருச்சி விமான நிலையத்தில் அறிமுகம்

திமுக சாா்பில் நாளை மொழிப்போா் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம்

காா்த்தி சிதம்பரம் மீதான விசா முறைகேடு வழக்கு: விசாரணையில் இருந்து மற்றொரு நீதிபதி விலகல்

SCROLL FOR NEXT