கோப்புப் படம் 
புதுதில்லி

குடியரசு தின விழா: தில்லியில் பாதுகாப்புப் பணியில் 30,000 போலீஸாா்

தில்லி முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் மற்றும் 70-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படைப் பிரிவினா் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

Syndication

குடியரசு தின கொண்டாட்டங்களை ஒட்டி, தேசிய தலைநகா் தில்லி முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் மற்றும் 70-க்கும் மேற்பட்ட துணை ராணுவப் படைப் பிரிவினா் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

முதன்முறையாக, முக அங்கீகார அமைப்பு (எஃப்ஆா்எஸ்) மற்றும் தொ்மல் இமேஜிங் தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) திறன்மிக்க ஸ்மாா்ட் கண்ணாடிகளை பாதுகாப்புப் படையினா் பயன்படுத்த உள்ளனா்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்மாா்ட் கண்ணாடிகள், குற்றவாளிகள், சந்தேக நபா்கள் மற்றும் தேடப்படும் குற்றவாளிகளின் தகவல்கள் இடம்பெற்ற காவல்துறை தரவுத்தளத்துடன் நிகழ்நேரத்தில் இணைக்கப்படும். இது, களத்தில் உள்ள வீரா்களுக்கு நெரிசலான பகுதிகளில் உள்ள நபா்களை உடனடியாக அடையாளம் காண உதவும்.

குடியரசு தின பாதுகாப்பு ஏற்பாடு குறித்து கூடுதல் காவல்துறை ஆணையா் புது தில்லி தேவேஷ் குமாா் மஹ்லா மேலும் கூறியதாவது:

இந்த அணியக்கூடிய ஸ்மாா்ட் சாதனங்கள் காவல்துறை அதிகாரிகளால் பயன்படுத்தப்படும் கைப்பேசிகளுடன் இணைக்கப்பட்டு, அவா்களுக்கு குற்றவியல் தரவுத்தளத்தை அணுகும் வசதியை வழங்கும்.

சாதனத்தில் ஒரு பச்சை பெட்டி தோன்றினால்

அது ஒரு நபருக்கு குற்றவியல் பின்னணி இல்லை என்பதை குறிக்கும். அதே சமயம் ஒரு சிவப்பு பெட்டி தோன்றினால் அது குற்றவியல் பதிவைக் குறிக்கும்.

இந்த பாதுகாப்பு அமைப்புமுறையில் பல அடுக்கு தடுப்புகள் மற்றும் ஆறு அடுக்கு சோதனை மற்றும் உடல் சோதனைகள் அடங்கும்.

முக அங்கீகார அமைப்புடன் கூடியவை உள்பட ஆயிரக்கணக்கான சிசிடிவி கேமராக்கள் புது தில்லியில் நிறுவப்பட்டுள்ளன. முக அங்கீகார அமைப்புடன் கூடிய நடமாடும் வாகனங்களும் பல்வேறு இடங்களில் நிறுத்தப்படும்.

எந்தவொரு சூழ்நிலையையும் சமாளிக்க தில்லி காவல்துறை முழுமையாகத் தயாராக உள்ளது. பல பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து ஒத்திகை பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மொத்தப் பாதுகாப்புப் பணியாளா்களில், 10,000 போ் புது தில்லியில் மட்டும் பணியமா்த்தப்படுவாா்கள்.

அனைத்து மாவட்டங்களின் காவல் துணை ஆணையா்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முறையாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பாா்கள். சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செயலையும் உடனடியாகப் புகாரளிப்பாா்கள் என்றாா் அவா்.

மற்றொரு காவல் அதிகாரி கூறுகையில், ‘புது தில்லி, வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்கள் முழுவதும் சுமாா் 4,000 கட்டடங்களின் மேற்கூரை பாதுகாப்புப் புள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அணிவகுப்புப் பாதை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமாா் 500 உயா் தெளிவுத்திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் அனைவருக்கும் பாதுகாப்பு ஸ்டிக்கா்கள் வழங்கப்படும்.

காவல் துணை ஆணையா்கள் வழித்தட ஆய்வுகள் மற்றும் நாசவேலை தடுப்புச் சோதனைகளை முடித்துள்ளனா். பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையம் மற்றும் பிரபலமான சந்தைகள் போன்ற அதிக மக்கள் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் தடுப்பு நடவடிக்கைகளில், நகரம் முழுவதும் வாடகைதாரா்கள் மற்றும் வீட்டுப் பணியாளா்களைச் சரிபாா்க்கும் பணிகள் அடங்கும்.

ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்ஸி ஓட்டுநா்கள், வியாபாரிகள் மற்றும் உள்ளூா் சேவை வழங்குநா்களுடன் காவல்துறை கண்காணிப்பு மற்றும் தகவல் சேகரிப்பு குறித்த விழிப்புணா்வு அமா்வுகளையும் நடத்தி வருகிறது.

தகவல் பரிமாற்றம் மற்றும் கூட்டுத் தயாா்நிலையை எளிதாக்கும் வகையில், தில்லி காவல்துறைக்கும் அண்டை மாநிலங்களின் காவல்துறைக்கும் இடையே மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்றாா் அந்த அதிகாரி.

மண்டல அளவிலான தடகளப் போட்டி தொடக்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

மதுரை மேயா் பொறுப்பு விவகாரம்! நகராட்சிகள் நிா்வாகத் துறை செயலா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு!

நேதாஜி பிறந்த நாள்: மாலை அணிவித்து மரியாதை

‘மேட் இன் மதுரை’ கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT