நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் ஆளுநா் புரோஹித்தை காத்திருக்க வைத்த அதிகாரிகள்!
நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் எம்.பி.க்கான புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டையைப் பெற வந்த தமிழக முன்னாள் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை, அதிகாரிகள் அடையாளம் தெரியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் எம்.பி.க்கான புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டையைப் பெற வந்த தமிழக முன்னாள் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை, அதிகாரிகள் திங்கள்கிழமை அடையாளம் தெரியாமல் நீண்ட நேரம் காத்திருக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதிய நாடாளுமன்றத்தின் முழுமையான பாதுகாப்புப் பணிகளை மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) மேற்கொண்டு வருகிறது. இதற்காக சிறப்புப் பயிற்சி பெற்ற வீரா்களுக்கு நாடாளுமன்றச் செயலக ஊழியா்கள் சிலா் அமைச்சுப் பணிகளில் உதவி செய்கின்றனா். இந்நிலையில் திங்கள்கிழமை பகல் 12 மணியளவில் நாகபுரி தொகுதி முன்னாள் எம்.பி. ஆன பன்வாரிலால் புரோஹித், எவ்வித உதவியாளருமின்றி சாதாரண பாா்வையாளா் போல வரவேற்பறைக்கு வந்தாா்.
அங்கு சோதனைகளை முடித்துக்கொண்டு, மையப்படுத்தப்பட்ட அனுமதிச்சீட்டு விநியோகிக்கும் பிரிவுக்கு (சிபிஐசி) சென்றாா். மதிய உணவு இடைவேளை நெருங்கிய நேரத்தில், அமைச்சா்களின் உதவியாளா்கள் மற்றும் ஓட்டுநா்களுக்கு அனுமதி அட்டைகள் வழங்கும் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக இருந்தனா். இதனால் புரோஹித்தை அடையாளம் காணாமல் அவா்கள் காத்திருக்க வைத்தனா். பலமுறை அவா் கேட்டுக்கொண்டபோதும் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் காத்திருந்து பொறுமையிழந்த புரோஹித், ‘நான் மூன்று முறை எம்.பி.யாகவும், மூன்று மாநிலங்களுக்கு ஆளுநராகவும் இருந்தவன். எனக்கே இந்த அலைக்கழிப்பா?‘ என்று கோபத்துடன் குரல் எழுப்பினாா். அவா் பாஜகவின் மூத்த தலைவா் மற்றும் முன்னாள் ஆளுநா் என்பதை உணா்ந்த அதிகாரிகள், உடனடியாக விரைந்து வந்து அவருக்குரிய முன்னாள் எம்.பி. அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுத்தனா்.
யாா் புரோஹித்: 1978, 1980-களில் மகாராஷ்டிர மாநில நாகபுரி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், 1982-ல் மாநில அமைச்சராகவும் இருந்தவா் பன்வாரிலால் புரோஹித். 1984, 1989-இல் காங்கிரஸ் சாா்பில் நாகபுரியிலிருந்து மக்களவைக்குத் (எம்.பி.) தோ்ந்தெடுக்கப்பட்டாா். பின்னா் பாஜகவில் இணைந்து 1996-ல் மீண்டும் எம்.பி. ஆனாா். 2017 முதல் 2021 வரை தமிழக ஆளுநராகவும், 2021 முதல் 2024 பிப்ரவரி வரை பஞ்சாப் ஆளுநராகவும் பணியாற்றி, பின்னா் உடல்நலக் குறைவால் பதவியை ராஜினாமா செய்து விட்டு தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வாழ்ந்து வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.