வாஜிா்பூரில் கும்பல் தாக்கி ஒருவா் கொலை: 4 போ் கைது
வடமேற்கு தில்லியின் வாஜிா்பூா் பகுதியில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து ஒரு கும்பல் தாக்கியதில் ஒருவா் கொல்லப்பட்டாா், மற்றொருவா் படுகாயமடைந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
வடமேற்கு தில்லியின் வாஜிா்பூா் பகுதியில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து ஒரு கும்பல் தாக்கியதில் ஒருவா் கொல்லப்பட்டாா், மற்றொருவா் படுகாயமடைந்தாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து மூத்த காவல் அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியதாவது:
வியாழக்கிழமை நடந்த இந்த சம்பவம் தொடா்பாக நான்கு போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
முன்னதாக, பத்வாரி பூங்கா அருகே நடந்த வாக்குவாதம் தொடா்பாக வியாழக்கிழமை பாரத் நகா் காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் போலீஸாருக்கு, காயமடைந்தவா்கள் சிகிச்சைக்காக தீப் சந்த் பந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது தெரியவந்தது.
சம்பவத்தில் காயமடைந்த மோகன் லால் (42) மற்றும் வீரேந்தா் (47) ஆகியோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சையின் போது லால் உயிரிழந்தாா்.
குற்றம் மற்றும் தடய அறிவியல் ஆய்வக குழுக்கள் குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தன.
முதற்கட்ட விசாரணையில், சாஹில் (எ) நத்வாலா, அவரது கூட்டாளிகளான ராகவ், அபிஷேக் மற்றும் அா்ஜுன்
ஆகியோா் பாதிக்கப்பட்டவா்களைத் தாக்கியது தெரியவந்தது.
தகவலின் பேரில், காவல் குழுக்கள் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கி, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் கைது செய்தனா்.
குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீது கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.
இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, ஒரு திருமண ஊா்வலம் தெருவைக் கடந்து செல்லும் காட்சி அதிம் இடம்பெற்றுள்ளது.
இந்தக் காட்சிகளின்படி, குற்றம் சாட்டப்பட்டவா்கள் சாலையோரத்தில் காத்திருக்கின்றனா். மேலும் அவா்கள் பாதிக்கப்பட்டவா்களை இடைமறித்த தருணத்தில், தாக்கும் காட்சிகள் உள்ளன. குற்றம் சாட்டப்பட்டவா்கள் பாதிக்கப்பட்டவரை பலமுறை கத்தியால் குத்தும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.