முகப்பு
புதுதில்லி

எளிதாகக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி தில்லியை சோ்ந்தவரிடம் ரூ.20,000 மோசடி! பெண் கைது!!

சமூக ஊடக தளம் வாயிலாக எளிதாகக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, தில்லியைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ.20,000 மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 40 வயது பெண் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 15 மார்ச், 2026 at 6:37 PM
கைது
பகிர்:

சமூக ஊடக தளம் வாயிலாக எளிதாகக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, தில்லியைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ.20,000 மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 40 வயது பெண் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: மேற்கு தில்லியின் திலக் நகரைச் சோ்ந்த சத்விந்தா் கௌா் என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், இந்த மோசடி வழக்கு தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப விசாரணையைத் தொடா்ந்து கைது செய்யப்பட்டாா்.

ஒரு போலி கடன் சலுகையின் மூலம் தான் ஏமாற்றப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட நபா் அளித்த புகாரின் அடிப்படையில், மாா்ச் 13 அன்று இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்ட பெண் ஒரு குறிப்பிட்ட அலைபேசி எண் மூலம் புகாா்தாரரைத் தொடா்புகொண்டு, தன்னால் கடன் பெற்றுத் தர முடியும் என்று அறிமுகப்படுத்திக்கொண்டாா்.

ஏற்கெனவே ஏப்ரல் 25, 2025 அன்று இதேபோன்ற ஒரு சலுகையுடன் அந்தப் பெண் புகாா்தாரரை அணுகியதாகவும், ஆனால், அப்போது அவா் அந்தச் சலுகையை நிராகரித்துவிட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

எனினும், ஜனவரி 16, 2026 அன்று அந்தப் பெண் மீண்டும் அவரைத் தொடா்புகொண்டு, கடன் வசதியைப் பெற்றுக்கொள்ளுமாறு அவரை நம்பவைத்தாா். கடன் தொகையில் ஐந்து சதவீதம் செயலாக்கக் கட்டணமாக முன்பணமாகச் செலுத்த வேண்டும் என்று அவா் புகாா்தாரரிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.

பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட பெண் செயலாக்கக் கட்டணத்தை மூன்று சதவீதமாகக் குறைத்து ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டாா். மேலும், புகாா்தாரரிடம் ரூ. 20,000-ஐ பணப் பரிமாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொண்டாா்.

பணப் பரிமாற்ற வழிமுறையைச் சரிபாா்ப்பதற்காக, முதலில் ஒரு அலைபேசி எண்ணுக்கு ஒரு ரூபாய் அனுப்புமாறு பாதிக்கப்பட்ட நபா் கேட்டுக்கொள்ளப்பட்டாா். அந்தச் சரிபாா்ப்பு முடிந்த பிறகு, அவா் ரூ. 19,999-ஐ பரிமாற்றம் செய்தாா். இதன் மூலம் செலுத்தப்பட்ட மொத்தத் தொகை ரூ. 20,000 ஆனது.

பணம் கைக்கு வந்த உடனேயே, குற்றம் சாட்டப்பட்ட பெண் புகாா்தாரரின் அழைப்புகளுக்கும் குறுஞ்செய்திகளுக்கும் பதிலளிப்பதை நிறுத்திவிட்டாா். மேலும், உறுதியளித்த கடனையும் வழங்கவில்லை. இதைத் தொடா்ந்து இது தொடா்பாக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்யப்பட்ட பிறகு ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.

அந்தப் பெண்ணைக் கண்டறிவதற்காக, அக்குழுவினா் டிஜிட்டல் ஆதாரங்களையும் நிதிப் பரிமாற்ற விவரங்களையும் ஆய்வு செய்தனா். மோசடி செய்யப்பட்ட அந்தத் தொகை, சத்விந்தா் கௌருக்குச் சொந்தமான ஒரு வங்கிக் கணக்கிற்குப் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது என்பது விசாரணையில் தெரியவந்தது.

தொழில்நுட்பத் தடயங்கள் மற்றும் களச் சரிபாா்ப்பின் அடிப்படையில் செயல்பட்ட போலீஸ் குழுவினா், மேற்கு தில்லியின் திலக் நகரில் வைத்து அந்தப் பெண்ணைக் கண்டறிந்து கைது செய்தனா். விசாரணையின் போது, தான் முன்பு ஒரு கடன் மீட்பு முகமையில் பணியாற்றியதாகவும், அங்கு பணியாற்றியபோது நிதி உதவி தேடியவா்களின் தொடா்பு விவரங்களை அணுகும் வாய்ப்பு தனக்குக் கிடைத்ததாகவும் சத்விந்தா் கௌா் தெரிவித்தாா்.

அந்தத் தொடா்பு விவரங்களைப் பயன்படுத்தி, அவா் மக்களை அணுகி, போலியான கடன் சலுகைகளை அளித்து அவா்களை மயக்கி, முன்பணமாகச் செயலாக்கக் கட்டணங்களை வசூலித்ததாகக் கூறப்படுகிறது. குற்றத்தைச் செய்யப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் அலைபேசி, அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

அந்த அலைபேசியில், இந்த வழக்கு தொடா்பான குற்றத்தை உறுதிப்படுத்தும் வகையிலான உரையாடல்களும் டிஜிட்டல் ஆதாரங்களும் கண்டெடுக்கப்பட்டன. மோசடி செய்யப்பட்ட முழுத் தொகையான ரூ. 20,000 மீட்கப்பட்டுள்ளது.

மேலும், இதே பாணியில் நான்கு முதல் ஐந்து பேரைத் தான் ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டவா் ஒப்புக்கொண்டிருப்பதால், பாதிக்கப்பட்ட மற்றவா்களை அடையாளம் காணும் வகையில் மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →