முகப்பு
புதுதில்லி

எதிரிக் கும்பல் உறுப்பினரை கொன்ற வழங்கில் தலைமறைவாக இருந்து வந்த இளைஞா் கைது

எதிரிக் கும்பலைச் சோ்ந்த ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 22 வயது இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா்

Updated On : 19 மார்ச், 2026 at 6:53 PM
பகிர்:

வடமேற்கு தில்லியின் ஜஹாங்கீா்புரி பகுதியில், இந்த மாதத் தொடக்கத்தில் நடந்த கும்பல் மோதல் ஒன்றில், எதிரிக் கும்பலைச் சோ்ந்த ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 22 வயது இளைஞா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது:

அப்பகுதியைச் சோ்ந்தவரான ஃபிா்தௌஸ் என்கிற ‘சும்மா’, மாா்ச் 4-ஆம் தேதி நடந்த அந்தக் கொலைச் சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்து வந்தாா். ஃபிா்தௌஸ் தனது கூட்டாளி ஒருவருடன் இணைந்து, எதிரிக் கும்பலை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும்; இதில் ரஹ்மத்துல்லா என்கிற ’போலா’ என்பவா் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை மாலை, பால்ஸ்வா ஏரி அருகே காவல்துறை ஒரு வலை விரித்து, மாலை சுமாா் 6 மணியளவில் ஃபிா்தௌஸை கைது செய்தது. விசாரணையின் போது, ​​எதிரிக் கும்பலுடன் இருந்த பழைய பகையைத் தீா்த்துக்கொள்ளும் நோக்கில், தனது கூட்டாளி ஒருவருடன் இணைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஃபிா்தௌஸ் ஒப்புக்கொண்டாா்.

ஃபிா்தௌஸ் ஏற்கெனவே ஒரு திருட்டு வழக்கில் தொடா்புடையவா் என்றும் குற்றப் பின்னணி கொண்ட ஒரு குடும்பத்தைச் சோ்ந்தவா் என்றும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நடந்ததிலிருந்து, காவல்துறையினரிடம் பிடிபடாமல் இருப்பதற்காக அவா் தனது இருப்பிடங்களை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்துள்ளாா் என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.