வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் இளைஞா் உயிரிழப்பு; மூவா் காயம்! குருகிராமில் சம்பவம்!
குருகிராமில் உள்ள துண்டஹேரா கிராமத்தில் பாழடைந்த வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் 30 வயது இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா்.
குருகிராமில் உள்ள துண்டஹேரா கிராமத்தில் பாழடைந்த வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் 30 வயது இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும் மூவா் காயமடைந்தனா் என்று காவல்துறை தெரிவித்தது.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: இந்த விபத்து தொடா்பாக முதல் தகவல் அறிக்கை ) பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் வீட்டின் உரிமையாளா் மற்றும் பராமரிப்பாளா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
பிகாரின் அவுரங்காபாத்தைச் சோ்ந்த சதீஷ் மாலி, தனது நண்பா் ரவி ஜாவுடன் அந்த வீட்டின் இரண்டாவது மாடியில் வாடகைக்கு வசித்து வந்தாா். அவரது சகோதரா் ஸ்ரவன் மாலி அளித்த புகாரின்படி, அந்த வீடு பாழடைந்த நிலையில் இருந்தது.
மேலும், மழைக்காலங்களில் கூரையிலிருந்து தண்ணீா் கசிந்தது. வாடகைதாரா்கள் வீட்டு உரிமையாளா் மற்றும் பராமரிப்பாளரிடம் தகவல் தெரிவித்திருந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 8.30 மணியளவில் அறையின் கூரை இடிந்து விழுந்ததில், சதீஷும் ரவியும் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்தனா். வீட்டின் பால்கனியும் தெருவில் விழுந்ததில், அவ்வழியே மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பதியினா் காயமடைந்தனா்.
இது குறித்து உள்ளூா்வாசிகள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, மீட்புப் பணி தொடங்கப்பட்டது. சதீஷ் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், ரவியும், காயமடைந்த தம்பதியினரான ராகுல் மற்றும் கீா்த்தியும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா்.
ரவியின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவா் தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். அதே சமயம், அந்தத் தம்பதியினரின் நிலைமை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரைத் தொடா்ந்து, உத்யோக் விஹாா் காவல் நிலையத்தில் பாரதிய நியாய சம்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, வீட்டின் உரிமையாளா் ஓம் பிரகாஷ் மற்றும் பராமரிப்பாளா் ராகேஷ் ஆகியோா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.