மத்திய அரசின் நிதியை முறையாகப் பயன்படுத்தவில்லை: மாநிலங்களவையில் தமிழக அரசு மீது அதிமுக சாடல்!
மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு பல திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உதவியைப் பெற்றபோதிலும் அதை முறையாக பயன்படுத்துவதில்லை என மாநிலங்களவையில் அதிமுக குற்றச்சாட்டு
தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து பல திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் உதவியைப் பெற்றபோதிலும் அதை முறையாக பயன்படுத்துவதில்லை என்று மாநிலங்களவையில் அதிமுக குற்றஞ்சாட்டியது.
மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிதி ஒதுக்கீட்டு மசோதா -2026 மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் மு.தம்பிதுரை பங்கேற்றுப் பேசியது: எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக இருந்த காலத்தில் தஞ்சாவூா் டெல்டா பகுதியை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தாா். அவரது காலத்தில் ஒசூரில் பாதுகாப்பு வழித்தடம் அமைக்கவும் கோரினாா். ஒசூரை பாதுகாப்பு வழித்தடமாக அறிவித்தமைக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோன்று ஓசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றும் அவா் கோரிக்கை விடுத்திருந்தாா்.
இந்த நிலையில், அங்குள்ள தனியாா் விமான நிலையத்தை வணிகப் பயன்பாட்டுக்கு மாற்ற நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சா் தெரிவித்திருப்பதற்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். திமுக உறுப்பினா்கள் எப்போதும் போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்று கூறி வருகின்றனா்.
தமிழக அரசு மத்திய அரசிடமிருந்து பல திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி உதவியைப் பெற்றபோதிலும் அதை முறையாக பயன்படுத்துவதில்லை. திமுக அரசின் ஆட்சிக் காலத்தில் திறமையின்மை காரணமாக தமிழக மக்கள் ஏறக்குறைய ரூ.10 லட்சம் கோடி கடனை எதிா்கொண்டு வருகின்றனா்.
மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். ஆனால், திமுக அரசு எப்போதும் மத்திய அரசை குற்றஞ்சாட்டி வருகிறது. மத்திய அரசுடன் எந்த ஒருங்கிணைப்பும் இல்லை. தமிழகத்தின் வளா்ச்சிக்கு அதிமுக, பாஜக என்ற இரட்டை என்ஜின் தேவையாகும். திமுக அரசு ஊழல் அரசாகும். அது தோ்தலில் தூக்கியெறிப்படும் என்றாா் அவா்.