முகப்பு
புதுதில்லி

1100-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்பிய மைசூா் நபா் கைது

நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், உயா்நீதிமன்றங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 1,100-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்பியதாகக் கூறப்படும் கா்நாடகத்தின் மைசூரைச் சோ்ந்த ஒருவர் கைது

Updated On : 30 மார்ச், 2026 at 11:14 PM
கைது - பிரதிப் படம்
பகிர்:

நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், உயா்நீதிமன்றங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 1,100-க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்பியதாகக் கூறப்படும் கா்நாடகத்தின் மைசூரைச் சோ்ந்த ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் திங்களன்று தெரிவித்தனா்.

குற்றஞ்சாட்டப்பட்டவரான 47 வயது ஸ்ரீனிவாஸ் லூயிஸ், தில்லி காவல்துறை மற்றும் உள்ளூா் காவல்துறை குழுக்களின் கூட்டு நடவடிக்கையைத் தொடா்ந்து, சனிக்கிழமையன்று அவா் வாடகைக்கு இருந்த வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி உயா்நீதிமன்றம், சட்டப்பேரவை மற்றும் பல கல்வி மற்றும் அரசு நிறுவனங்களுக்கு சமீபகாலமாக தொடா்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் அனுப்பப்பட்டு வரும் நிலையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்ரீனிவாஸ் லூயிஸ் ஒரு முதுகலைப் பட்டதாரி என்றும், பெங்களூருவைச் சோ்ந்தவா் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. அவா் தற்போது வேலையில்லாமல், ஓய்வுபெற்ற அரசு ஊழியரான தனது தாயாருடன் வசித்து வருகிறாா்.

முதற்கட்ட விசாரணையில் அவா் மன அழுத்தத்தில் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது. ஆரம்பகட்ட விசாரணையின்போது, மின்னஞ்சல்கள் மற்றும் பிற தகவல் தொடா்பு தளங்கள் மூலம் நாடு முழுவதும் 1,100க்கும் மேற்பட்ட மிரட்டல் செய்திகளை அனுப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டவா் ஒப்புக்கொண்டாா், என்று ஒரு மூத்த அதிகாரி கூறினாா்.

இந்த மிரட்டல்களைத் தொடா்ந்து பல்வேறு மாநிலங்களில் பல முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.