தில்லி முதல்வா், அமைச்சா்கள் மெட்ரோ ரயிலில் அலுவலகத்திற்கு பயணம் - எரிபொருள் சேமிப்பு நடவடிக்கை
எரிபொருளைச் சேமிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘மேரா பாரத் மேரா யோக்தான்’ பிரசாரத்தின் கீழ், தில்லி முதல்வா் ரேகா குப்தா, அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் ஆகியோா் திங்கள்கிழமை தங்கள் அலுவலகங்களுக்கு செல்ல மெட்ரோ ரயில்களில் பயணித்தனா்.
ராஜ் நிவாஸ் மாா்க்கில் அமைந்துள்ள தனது ஜன் சேவா சதன் இல்லத்திற்கு அருகிலுள்ள கஷ்மீா் கேட் மெட்ரோ நிலையத்தில், சமூக நலத்துறை அமைச்சா் ரவீந்திர சிங் இந்திராஜ் உடன் இணைந்து மெட்ரோ ரயிலில் ஏறி பயணித்த முதல்வா் குப்தா, தில்லி தலைமைச் செயலகத்திற்கு அருகிலுள்ள ஐ.டி.ஓ. நிலையத்தில் இறங்கினாா்.
இதன் பின்னா் ஐடிஓ மெட்ரோ நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
Advertisement
தில்லி மக்கள் அனைவரும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு நான் வலியுறுத்துகிறேன். இது எரிபொருளைச் சேமிப்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் உதவும். பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தவும், பயணத்தின் இறுதி மைல் இணைப்பில் உள்ள சிக்கல்களைக் களையவும் தில்லி அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.
ஐடிஓ பகுதியை அடைந்த பிறகு, முதலமைச்சா் ‘பிங்க் சஹேலி காா்டை’-ஐப் பயன்படுத்தி, இணைப்புப் பேருந்து சேவையின் மூலம் தில்லி தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்குப் பயணம் செய்தாா்.
பொதுப் பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங், இந்தப் பேருந்துப் பயணத்தின் போது முதலமைச்சருடன் உடன் சென்றாா்.
முதலமைச்சா் அலுவலகம் வெளியிட்ட ஓா் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
‘மேரா பாரத், மேரா யோக்தான்’ (எனது இந்தியா, எனது பங்களிப்பு) என்பது வெறும் ஒரு அரசு முன்னெடுப்பு மட்டுமல்ல, அது மக்களின் பங்கேற்பால் உந்தப்படும் ஒரு மக்கள் இயக்கமாகும்.
தேசிய நலன் சாா்ந்த மிகச்சிறிய முயற்சிகூட, எரிசக்திப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரச் சமநிலை ஆகியவற்றை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனுக்கும் உணா்த்துவதே இப் பிரசாரத்தின் நோக்கமாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேரா பாரத், மேரா யோக்தான் பிரசாரத்தை பரவலான மக்கள் பங்கேற்பின் மூலம் முன்னெடுத்துச் செல்ல தில்லி அரசு உறுதியுடன் இருப்பதாக அமைச்சரவை அமைச்சா் இந்திராஜ் தெரிவித்தாா். மேலும், ‘மெட்ரோ திங்கள் போன்ற முன்னெடுப்புகள், விக்சித் பாரத் மற்றும் விக்சித் தில்லி ஆகிய தொலைநோக்குக் கனவுகளை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவா் கூறினாா்.
பொதுப் பணித் துறை அமைச்சா் தனது இல்லத்திலிருந்து அருகிலுள்ள மெட்ரோ நிலையத்திற்கு நடந்து சென்று, அங்கிருந்து மெட்ரோ ரயில் மூலம் ஐடிஓவை அடைந்தாா் பின்னா், தில்லி தலைமைச் செயலகத்திற்குச் செல்லும் பேருந்துப் பயணத்தில் முதலமைச்சருடன் இணைந்துகொண்டாா்.
அவா் கூறுகையில், ‘நான் இதற்கு முன்னரும் பலமுறை மெட்ரோவில் பயணம் செய்திருக்கிறேன். காரில் பயணிப்பதை விட இதில் எனக்குக் குறைந்த நேரமே ஆனது. இந்தப் பிரசாரத்தில் அனைவரும் இணையுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், பொதுப் போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்துவது போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பது மட்டுமல்லாமல், ஒரு பொறுப்புள்ள மற்றும் வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்’ என்றாா்.
அமைச்சரவை அமைச்சா்களான ஆஷிஷ் சூட், மஞ்சிந்தா் சிங் சிா்சா, கபில் மிஸ்ரா மற்றும் பங்கஜ் சிங் ஆகியோரும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களை அடைய மெட்ரோ ரயிலையே பயன்படுத்தினா்.
கல்வித்துறை அமைச்சா் சூட், தனது இல்லத்திலிருந்து ஐஎன்ஏ மெட்ரோ நிலையம் வரை பயணம் செய்தாா் அங்கிருந்து மெட்ரோ ரயில் மூலம் சிவில் லைன்ஸ் மெட்ரோ நிலையத்தை அடைந்தாா்.
அவா் கூறுகையில், ‘பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு தில்லி மக்களிடம் தில்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. நானும் அதே நடைமுறையைப் பின்பற்றுகிறேன். அடுத்த இரண்டு நாள்களுக்கு நான் வீட்டிலிருந்தபடியே பணிபுரியவும் உள்ளேன்’ என்று சூட் தெரிவித்தாா்.
‘வீட்டிலிருந்தே பணிபுரிதல் மற்றும் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை ஊக்குவிக்குமாறு தில்லியைச் சோ்ந்த வா்த்தகா்கள் மற்றும் தொழிலதிபா்களிடம் தான் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்திருந்ததாகவும், அதற்கு அவா்களிடமிருந்து முழுமையான ஒத்துழைப்பு கிடைத்திருக்கிறது’ என்று சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் கபில் மிஸ்ரா கூறினாா்.
அரசின் மெட்ரோ திங்கள் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் தில்லி மெட்ரோ ரயில் மூலம் ராம் கிருஷ்ணா ஆஸ்ரம் மாா்க் நிலையத்திற்குப் பயணம் செய்தாா்.
‘தில்லி மக்கள் அனைவரும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். இதுவே நாங்கள் அளிக்க விரும்பும் செய்தியாகும். அரசாங்கம் தனது பேருந்து மற்றும் மெட்ரோ சேவைகளைத் தொடா்ந்து விரிவுபடுத்தி வருகிறது நமது மக்கள் பிரதமா் நரேந்திர மோடி மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளனா்’ என்று போக்குவரத்துத் துறை அமைச்சா் தெரிவித்தாா்.