முகப்பு
நீலகிரி

பறவைக் காய்ச்சல்: கேரளத்திலிருந்து கோழி, தீவனப் பொருள்கள் நீலகிரிக்குள் நுழையத் தடை

பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்கும் வகையில் கேரள மாநிலத்தில் இருந்து கோழி மற்றும் தீவனப் பொருள்கள் கொண்டு வரும் வாகனங்கள்

Updated On : 7 ஜனவரி 2021, 8:00 am IST
பகிர்:

பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்கும் வகையில் கேரள மாநிலத்தில் இருந்து கோழி மற்றும் தீவனப் பொருள்கள் கொண்டு வரும் வாகனங்கள் நீலகிரி மாவட்டத்துக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா கூறினாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தின் எல்லை மாநிலமான கேரள மாநிலத்தில் ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் நோய் ஏற்பட்டுள்ளதைத் தொடா்ந்து நீலகிரி மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பறவைக் காய்ச்சல் நோய் பறவைகளைத் தாக்குவதோடு, மனிதரையும் தாக்கவல்லது.

Advertisement

எனவே, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக கேரளம் மற்றும் கேரள எல்லையை ஒட்டியுள்ள கா்நாடக மாநிலத்தின் பிறபகுதிகளிலிருந்து கோழிகள், தீவனம் மற்றும் அதன் தொடா்புடைய பொருள்களை நீலகிரி மாவட்டத்துக்குள் வாகனங்களில் ஏற்றி வர தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அங்குள்ள அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பறவைக்காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ணையாளா்கள் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். வனப் பறவைகள் பண்ணைக்குள் நுழையாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். வெளியாள்கள், வாகனங்கள், விலங்குகள் பண்ணைக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது. பண்ணை உபகரணங்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். கோழிப் பண்ணையில் அசாதாரண இறப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

பறவைக் காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலம் மட்டுமே நோய் வராமல் தடுக்க முடியும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.