இயற்கை அன்னையின் அன்புக் குழந்தைகள்
இயற்கை அன்னையின் அன்புக் குழந்தைகள் - மலையமான்; பக்.144; ரூ.70; அன்பு பதிப்பகம், சென்னை-18; 044 - 2499 6611.
இயற்கை அன்னையின் அன்புக் குழந்தைகள் - மலையமான்; பக்.144; ரூ.70; அன்பு பதிப்பகம், சென்னை-18; 044 - 2499 6611.
நாய்க்கு நன்றி சொல்லவும்,பூனைக்கு கோபத்தை வெளிப்படுத்தவும் அதன் வால்கள் பயன்படுவதைப் போல ஆடு,மாடு, அணில்,நாய்,பூனை,குதிரை,குரங்கு,கங்காரு உள்ளிட்டவை அதன் வால்களை என்னென்ன காரணங்களுக்காக எவ்வாறு பயன்படுத்துகின்றன? எந்தெந்த உயிரினங்கள் தனது உணவுத் தேடலையும்,தண்ணீர்த் தாகத்தையும் எப்படி பூர்த்தி செய்து கொள்கின்றன? என நூலில் சொல்லப்பட்டிருக்கும் விதம் அற்புதம்.
சூரியப்பறவை, தவிட்டுக்குருவி உள்பட 5 பறவை இனங்கள்,கடல் குதிரை,கடல் சிலந்தி உள்பட 4 கடல்வாழ் உயிரினங்கள், மின்மினிப் பூச்சிகள், கஸ்தூரிமான், தேவாங்கு உள்ளிட்ட அரிய வகையிலான 17 உயிரினங்களிடம் உள்ள நமக்குப் பெரும்பாலும் தெரிந்திராத அதன் தோற்றம்,இனப்பெருக்கம்,வாழ்க்கை முறைகள்,வகைகள் ஆகியனவற்றை ஆசிரியர் விரிவாக விவரித்திருக்கிறார். இவை தவிர சுமார் 100க்கும் மேற்பட்ட உயிரினங்களின் வியப்பூட்டும் சிறப்புகளையும் ஆங்காங்கே நூலில் பல்வேறு இடங்களில் சொல்லியிருக்கிறார்.
முட்டை போடுவதையும், குட்டி போடுவதையும் பெண் இனங்களே செய்தாலும் அக்குட்டிகளையும்,முட்டைகளையும் வித்தியாசமான முறையில் பாதுகாக்கும் ஆண் இனங்கள் பற்றியும் நூலில் சொல்லப்பட்டிருக்கிறது. எறும்புகளையும் அதன் சிறப்புகளையும் பற்றி பழங்கால இலக்கியங்கள் கூறும் பாடல்களும்,அதற்கான விளக்கங்களும் நூலுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கின்றன.
தாத்தாக்களும்,பாட்டிகளும் தங்கள் பேரக்குழந்தைகளைத் தூக்கி வைத்துக் கொண்டு இந்நூலில் சொல்லப்பட்டுள்ள விநோத உயிரினங்களின் குணங்களை ஒவ்வொன்றாய் சொல்லி மகிழ்ந்திடத் தேவையான புத்தகம்.