ரோஜா நிறச்சட்டை
ரோஜா நிறச்சட்டை - அழகியசிங்கர்; பக்.108; ரூ.100; விருட்சம், சென்னை-33; )044- 2471 0610.
ரோஜா நிறச்சட்டை - அழகியசிங்கர்; பக்.108; ரூ.100; விருட்சம், சென்னை-33; )044- 2471 0610.
பதினான்கு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. எல்லா கதைகளுமே ஒரு வங்கி அதிகாரியின் வாழ்க்கைச் சம்பவங்களாகவே - பெரும்பாலும் அலுவலகச் சூழல் சார்ந்தே- அமைந்திருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சட்டையைத் தான் அணிந்து கொண்டால் அன்று தனக்கு ஏதாவது பிரச்னை ஏற்படும் என்று நம்புகிற ஒருவனின் பய உணர்விலிருந்து, கல்லூரி மாணவியான தனது மகள், சில இளைஞர்களோடு சுற்றித் திரிவதைப் பார்க்கும் ஒரு தகப்பனின் மன உளைச்சல் வரை பல்வேறு நுட்பமான மன உணர்வுகள் துல்லியமாக இக்கதைகளில் பதிவாகியிருக்கின்றன.
பத்மநாபன் சைக்கிள் ஓட்டும் சரஸ்வதியைச் சந்திப்பதில் தொடங்கி, பல சம்பவங்களுக்குப் பிறகு மீண்டும் சரஸ்வதியைச் சந்திப்பதில் முடியும் "ரோஜா நிறச்சட்டை', எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸின் மரணத்தில் தொடங்கி அவரைப் பற்றி நினைவுகளுடன் முடியும் "அஷ்வந்திபுரம்', கதாசிரியரே ஒரு பாத்திரமாக மற்றவர்களால் பேசப்படும் "பத்மநாபன் தன் கதையைத் தானே படிக்கிறார்', ஒரு சிறு சம்பவத்தைக் கதையாக்கி அதற்கு இரண்டு விதமான முடிவுகளைத் தந்திருக்கும் "ஒரு கதை இரு முடிவுகள்' போன்றவை புதிய உத்திகளை கதாசிரியர் முயற்சித்திருப்பதற்கான சான்றுகள். சிறந்த கதைகள்.
"இருபது ரூபாய்'. "அலாரம்', "இரண்டு கடிதங்கள்' போன்றவை வெறும் சம்பவச் சித்திரிப்புகளே.
"ஹலோ', "பாம்பு' போன்ற கதைகளில் ஒரு கட்டுரைத் தனம் தெரிகிறது. "இரண்டு கடிதங்கள்' தலைப்பு அக்கதைக்குப் பொருத்தமற்றது. அடுத்த பதிப்பிலாவது அச்சுப் பிழைகள் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம்.