காஞ்சி முனியெனும் கருணை நிதி - ஸ்ரீதர் - சாமா; பக்.144; ரூ.100; விருட்சம், சென்னை-33; )044- 2471 0610.
காஞ்சிபுரம் காமகோடி பீடத்தின் அறுபத்தெட்டாவது பீடாதிபதியாகத் திகழ்ந்தவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். "பரமாச்சார்யா' என்றும் "மஹா பெரியவா' என்றும் பக்தர்களால் அழைக்கப்படும் சுவாமிகளின் வாழ்வில் நிகழ்ந்த பல அபூர்வ சம்பவங்கள், அவரது உபதேசங்கள் ஆகியவற்றின் தொகுப்பே இந்நூல்.
பிற துறவிகளைப் போல உலக நன்மைக்காக கடவுளை வழிபடுபவராக மட்டும் இல்லாமல், துன்பப்படுவோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதே உண்மையான இறைப்பணி என்று கூறி அப்படியே செயல்பட்டும் இருக்கிறார். குறிப்பாக, உயிருக்குப் போராடுபவர்களுக்கு உதவி செய்து அவர்களின் உயிரைக் காப்பது, இறந்துவிட்டவர்களுக்கான இறுதிச் சடங்குகளை செய்ய உதவி செய்வது போன்றவற்றை தன் வாழ்நாள் இறுதிவரை கடைப்பிடித்திருக்கிறார்.
வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்ததோடு, ஆங்கிலம், பிரெஞ்சு, தெலுங்கு, கன்னடம், லத்தீன் போன்ற பல மொழிகளிலும் புலமை மிக்கவராகவும் இருந்துள்ளது வியப்பளிக்கிறது.
தமிழக முன்னாள் ஆளுநர் அலெக்ஸாண்டர், சுவாமிகளை சந்தித்தபோது, தான் ஒரு சிரியன் கிறிஸ்தவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதும், அந்தப் பிரிவினரின் சமூகப் பின்னணி, பழக்க வழக்கங்கள், சமூகத் தொண்டுகள், கேரளத்தில் அவர்கள் முதன்முதலில் வந்து குடியேறியது போன்ற விவரங்களை சுவாமிகள் விளக்கியது அலெக்ஸாண்டரையே மகிழ்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
ஆதிசங்கரருக்கு அஞ்சல் தலை வெளியிட மத்திய அரசு முடிவெடுத்தபோது நியாயமான காரணம் கூறி அதனை மறுத்திருக்கிறார் சுவாமிகள்.
நடிகர் சிவாஜிகணேசன் தனது மனைவி மற்றும் பெற்றோருடன் சுவாமிகளைச் சந்தித்தது; இசைக்கலைஞர் கே.வி.மகாதேவன் தன் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்னையைத் தீர்க்க சுவாமிகளைச் சந்தித்தது போன்ற பல சுவையான சம்பவங்கள் இந்நூலில் அடங்கியுள்ளன. சிறப்பான நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.