நெற்றிக்கண்
நெற்றிக்கண் - லாப்சேங் ரம்ப்பா (தமிழில் - எஸ்.ராஜேந்திரன்); பக்.374; ரூ.375; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை - 600 017, 044-2433 2682, 24338712.
திபெத்திய மொழியில் 'லாமா' என்றால் குரு என்று பொருள். மருத்துவத்தில் லாமாவாகும் தகுதியைப் பெறுவதற்காக திபெத்திய மடத்தில் சேர்ந்த லாப்சேங் ரம்ப்பா என்ற இளைஞரின் சுய சரிதை இது.
உயர்குடியில் பிறந்த லாப்சேங், லாமா பட்டம் பெறுவதற்காக சிறுவயதிலிருந்தே மிகக் கடினமாகப் பயிற்றுவிக்கப்படுகிறார். கட்டுக்கோப்பான மடாலயப் பயிற்சிக்குப் பிறகு, லாப்சேங்கின் நெற்றிக்கண் திறக்கும் நிகழ்வு மூத்த லாமாக்களால் நிறைவேற்றப்படுகிறது. அந்த அனுபவத்துக்குப் பிறகு மூலிகை மருத்துவம், யோகா, ஆன்மிகம், திபெத்தியர்களின் நம்பிக்கைகள் உள்ளிட்டவை குறித்த ஆழ்ந்த புரிதல் அவருக்கு ஏற்படுகிறது. அதன் பிறகு மிகவும் கடினமானதும் நெடிய பாரம்பரியமிக்கதுமான தேர்வுமுறைகளுக்குத் தன்னை உள்படுத்திக் கொண்டு லாமா பட்டத்தையும் இறுதித் தீட்சையையும் பெறுகிறார்.
ஒருவரது ஒளியின் நிறத்தையும் அதன் தீவிரத்தையும் வைத்தே அவரது ஆரோக்கியத்தைத் தீர்மானிக்க முடிந்ததாகவும், அவர் உண்மை பேசுகிறாரா அல்லது பொய் உரைக்கிறாரா என்பதை கணிக்க முடிந்ததாகவும் லாப்சேங் குறிப்பிடுகிறார்.
திபெத், பிக்குகளால் ஆளப்படும் நாடு. புற உலகில் நாட்டமின்றித் தியானத்தில் ஆழ்ந்து தேக வரையறைகளை கடக்கவே திபெத்தியர் விரும்புவர் என்பதை ஒவ்வோர் அத்தியாயமும் உணர்த்துகிறது.
சுற்றுலா கண்ணோட்டத்தில் மட்டுமே பரவலாக அறியப்பட்ட திபெத்தின் இன்னொரு பரிமாணமாக அதன் ஆன்மிகக் கலாசாரம், மடாலய வாழ்க்கை முறை, மறைபொருள் விஞ்ஞானம் குறித்தும் இந்த நூல் விவரிக்கிறது.