கற்பின் கனலி
கற்பின் கனலி - அரங்க இராமலிங்கம்; பக். 176; ரூ. 150; ஜோதி பதிப்பகம், சென்னை-37; 99401 90616.
கம்பராமாயணம் தொடர்பாக மேடைகளில் தான் ஆற்றிய சொற்பொழிவுகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார் ஆசிரியர். பாலகாண்டத்தில் ஏழாவது படலமாக அமைந்துள்ள தாடகை வதைப் படலத்தின் முக்கியப் பாத்திரமான தாடகை அரக்க வடிவினளானாலும் அவள் பிறக்கும்போது பேரழகுடனும் பேராற்றலுடனும் விளங்கியவள் என்பதை விளக்கும் 'தாடகை' கட்டுரையில் தொடங்கி, ஐம்புலன்களையும் அடக்கி வெற்றிகொண்ட தனிமனித அறத்துக்கு முன்னால், சமுதாய அறம் தோற்றுப் போகும் எனும் உண்மையை உரைக்கும் 'எரி புகுதல்' கட்டுரை வரை ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
கம்பரைப் பற்றி பாரதியார் கூறும்போது, 'எல்லையொன்றின்மை எனும் பொருளதனைக் கம்பன் குறிகளால் காட்டிட' என்று கூறியிருப்பதை அடிப்படையாகக் கொண்டு எல்லையொன்றின்மை எனும் பொருளை கம்பர் எங்கு எவ்வாறு நிகழ்த்தினார் என்பதை ஆராய்கிறது 'எல்லையொன்றின்மை எனும் பொருள்' கட்டுரை. 'அறமா? உரிமையா?' கட்டுரையில் அறம் தழைக்க வேண்டும் என்பதற்காகத் தனது உரிமையை விட்டுக்கொடுத்து அறத்திற்கே வாழ்வு தந்தவன் பரதன் என்னும் கருத்து விளக்கப்படுகிறது.
மேலும், முதன்முதலில் அனுமனைக் கண்ட இராமனின் மனநிலையைக் காட்டும் 'காணுதி மெய்ம்மை', பெருந்தவமும் பெருவலிமையும் பெற்றிருந்த இராவணன், பிறன்மனை நயந்ததால் உடல்கெட்டு, உணர்வு மயங்கி, உயிரை விட்டதைக் கூறும் 'இராவணன்', கம்பராமாயணத்தில் சித்தர் நெறி இடம்பெற்றிருப்பதை விவரிக்கும் 'கம்பனில் சித்தர் நெறி' தயரத மன்னன் செய்த ஆறு குற்றங்களைப் பட்டியலிடும் 'தயரதன் குற்றவாளி', இலக்குவன் இராமன் மீது அன்பு பூண்டவனா, இராமனுக்குப் பணி செய்பவனா என்பதை ஆய்வு செய்யும் 'அன்பனா? தொண்டனா?' ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. நூலாசிரியர் தமிழிலக்கியத்தில் ஆழங்காற்பட்டவர் என்பதைத் தெற்றென உணர முடிகிறது.