ஆல்ஃபா அப்பா ஒமேகா அம்மா
ஆல்ஃபா அப்பா ஒமேகா அம்மா - நியாண்டர் செல்வன்; பக். 256; ரூ.290; சுவாசம் பதிப்பகம், சென்னை-127; 8148066645.
வித்தியாசமான தலைப்புடன் இந்த நூல் வந்திருக்கிறது. ஆண்மை, பெண்மை ஆகிய இரண்டும் பொருளை இழந்து நிற்கின்றன. பதின்ம வயதுச் சிறுவர்களுக்கு எதைச் சொல்லித் தருவது, எப்படிச் சொல்லித் தருவது என்பது பெற்றோர்களுக்கும் தெரியவில்லை. ஆசிரியர்களோ குழம்பிப் போயுள்ளனர்.
முந்தைய வாழ்க்கைக் கோட்பாடுகளைத் தங்கள் பிள்ளைகளிடம் புகுத்துவதா அல்லது நவீனக் கோட்பாடுகளைத் தாங்கள் ஏற்றுக் கொள்வதா என்ற கேள்விக்கு இன்று யாருக்கும் பதில் தெரியவில்லை. உலகமே உள்ளங்கையில் சுருங்கிவிட்ட நிலையில், சிறுவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கலங்கரை விளக்கம் போல இந்த நூல் விளங்கும்.
அறிவுரைகளை வீசாமல், பிரச்னைகள் என்ன, அதற்கான தீர்வுகள் என்ன, எப்படிச் சாத்தியம் என்பதை நிகழ்கால நிகழ்வுகளோடு விளக்கி இருக்கிறார் நூலாசிரியர். அதற்காக வரலாற்றுக் கால நிகழ்வுகள் சிலவற்றின் மூலம் விளக்குகிறார்.
இதை சிறந்த வழிகாட்டி நூல் எனலாம். ஏறக்குறைய 110 தலைப்புகளில் உள்ள கட்டுரைகள் ஒன்றிரண்டு பக்கங்களில் இருந்தாலும், வரிக்கு வரி தன்னம்பிக்கையும், நல்வழிகாட்டுபவையாகவும் இருக்கின்றன.
இந்த நூல் இளைய தலைமுறையினருக்கும், அடுத்த சந்ததிக்கும் ஒரு பொக்கிஷம்.