பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியனார் புலமை நலம்
பேராசிரியர் ச.வே.சுப்பிரமணியனார் புலமை நலம் - பால்வளன் அரசு; பக். 144; ரூ.150; கதிரவன் பதிப்பகம், பாளையங்கோட்டை-627 002; 7598399967.
தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூரில் பிறந்த ச.வே.சுப்பிரமணியனார், திருவனந்தபுரம் பல்கலைக்கழகம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழூர் உலகத் தமிழ்க் கல்வி இயக்ககம் ஆகிய மூன்று களங்களிலும் அயராது செயலாற்றியவர். இவரது மாணவர்களில் பலர் இன்று புகழ்பெற்ற தமிழறிஞர்களாக உள்ளனர்.
படைப்பாற்றல் மிக்க இவர், தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் எழுதும் திறன் பெற்றவர்.
ஏராளமான நூல்களை எழுதி, 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். வானொலியில் 100-க்கும் மேற்பட்ட உரைகளை நிகழ்த்தியுள்ளார். சிறப்புமிக்க இவரது தமிழ்ப்புலமையை நூலாசிரியர் ஆய்வு செய்து, நூலை வெளியிட்டுள்ளார்.
தொல்காப்பியம், திருக்குறள், திருவருட்பா, சிலப்பதிகாரம், திருமுறை, ஐம்பெரும் காப்பியம், இராம காதை உள்ளிட்டவற்றில் சுப்பிரமணியனார் எழுதிய தமிழ்க் கட்டுரைகள் குறித்த அறிஞர்களின் 10 ஆய்வுக் கட்டுரைகள் நூலில் இடம்பெற்றுள்ளன.
ச.வே.சு.வின் தமிழ்ப் புலமையை வியக்கவைக்கும் வகையில் இந்த நூல் உள்ளது. இந்த நூலைப் படிப்போரை அவர் எழுதிய பிற நூல்களையும் வாசிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது.