இதழியல் வரலாறும் வழிகாட்டுதலும்
இதழியல் வரலாறும் வழிகாட்டுதலும் - முனைவர் ப. பாலசுப்பிரமணியன் ; பக். 208 ; ரூ. 220 ; சங்கர் பதிப்பகம், சென்னை ; 044-26502086.
செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி போன்ற இதழியல் துறையை நூலாசிரியர் தனித்தனியாகப் பதிவு செய்துள்ளார்.
பத்திரிகை வளர்ச்சிகள், இந்தியாவில் இதழியல், தமிழ்நாட்டில் பத்திரிகைகள், சுதந்திரப் போராட்டத்தில் பத்திரிகைகள், ஆங்கிலேயர் ஆட்சியில் பத்திரிகை சட்டங்கள் போன்றவற்றை தெளிவாக எளிய நடையில் நூல் பதிவு செய்கிறது.
சுதந்திரத்துக்குப் பின்பு தமிழ் பத்திரிகை உலகின் வளர்ச்சி, அதன் பங்களிப்புகளைப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். குறிப்பாக, பத்திரிகை அடிப்படை சட்டங்கள் குறித்து அறியும் அளவுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது நூலகங்களுக்கு இதழ்கள் அனுப்பும் சட்டம், பத்திரிகைகளில் பணிபுரிவோருக்குரிய சட்டம், பதிப்புரிமைச் சட்டம் உள்ளிட்டவை குறித்தும் அறியலாம்.
பத்திரிகை மன்றம் எப்படி செயல்படுகிறது, செய்தியாளருக்குத் தேவையான தகுதிகள், சிறப்புத் திறமைகள் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு பத்திரிகை அலுவலகத்தில் செய்தி பிரிவு எவ்வாறு செயல்படுகிறது ? செய்தி தேர்வு செய்யும் முறைகள் என்னென்ன? அரசு செய்திகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன? நீதிமன்றச் செய்தி, குற்றச் செய்தி, விளையாட்டு செய்தி, ஆன்மிக செய்தி உள்ளிட்ட பிரிவுகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளன. செய்தி நிறுவனங்கள் குறித்த பொதுத் தகவல்கள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இளம் தலைமுறையினர் சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம்.