சாதிகள் உண்மையுமல்ல... பொய்மையுமல்ல... (நேர்காணல்கள்)
சாதிகள் உண்மையுமல்ல... பொய்மையுமல்ல... (நேர்காணல்கள்) - தொ.பரமசிவன்; பக். 232; ரூ. 270; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை- 98; 044 - 26251968.
மறைந்த பேராசிரியர் தொ. பரமசிவனிடம் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு இதழ்களுக்காக வெவ்வேறு நபர்களால் எடுக்கப்பட்ட 13 நேர்காணல்
களின் தொகுப்பே இந்த நூல். அவரது எழுத்தும் பேச்சும் தமிழ்ப் பண்பாட்டு அடையாளங்களைத் தெளிய வைப்பதில் பெரும் பங்காற்றுவதுடன் புதிய திறப்புகளையும் ஏற்படுத்தக் கூடியவை. இந்த நூலும் விதிவிலக்கல்ல.
அரசு ஆதரவு இல்லாத நிலையிலும் பழங்காலத் தமிழகத்தில் வைணவம் தாக்குப் பிடித்து நிலைத்திருக்க ஆசிரியர் தெரிவிக்கும் காரணம் குறிப்பிடத்தக்கது. தவிர, அறியப்படாத தமிழகத்தைப் பற்றி முழுமையாக வெளிக்கொணர வற்புறுத்துகிறார்.
நாட்டார் தெய்வ வழிபாட்டுக்கான காரண, காரியங்களை வலுவான சான்றுகள், பின்புலத்துடன் விவரிக்கும் ஆசிரியர், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது எந்த வகையில் மக்கள் விரோதச் சித்தாந்தம் என்றும் விளக்குகிறார்.
களப்பிரர் காலத்தை ஏன் இருண்ட காலம் என்கிறார்கள் என்பதுடன் அந்தக் காலகட்டத்தில் எவ்வாறு அவைதிக மதங்கள் எழுச்சியுற்றன, வர்ணாசிரமக் கொள்கையில் நம்பிக்கையுள்ளவன் என்று தன்னை எப்போது காந்தி அறிவித்துக் கொள்கிறார்? சாதிகள் எவ்வாறு, ஏன் நிலைத்திருக்கின்றன? ஆனாலும் சாதிப் பெயர் துறப்பு எவ்வாறு சாத்தியமாயிற்று? என்பது பற்றியெல்லாம் விரிவான தகவல்களைத் தருகிறார் ஆசிரியர்.
இடதுசாரிகளின் தவறுகளை விமர்சிக்கும் தொ.ப., நேர்காணல்களில் பெரியாரியத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்கும் இணக்கமானதொரு பார்வையை முன்வைப்பதுடன் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர் அல்லர் பெரியார் என்றும் நிறுவுகிறார். வாசிக்க வேண்டிய தகவல் களஞ்சியம்.