தமிழ் இலக்கிய வரலாறு
தமிழ் இலக்கிய வரலாறு - மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்; பக். 336; ரூ. 270; ஜீவா பதிப்பகம், சென்னை -17; 9952079787.
பாவாணரால் தமிழுக்கு வழங்கப்பட்ட எண்ணற்ற எழுத்துக் கொடைகளில் ஒன்று தமிழ் இலக்கிய வரலாறு.
மனிதன் தோன்றியது அல்லது படைக்கப்பட்டது குமரி நாடே, குமரி நாடே தமிழனின் பிறந்தகமும் எனத் தொடங்கி, தமிழின் மொழிப் பழைமையை மொழியமைப்பு, ஒலியெளிமை, சொல்வளம் எனப் பல தலைப்புகளில் விளக்கும் பாவாணர், தமிழர் பரவல் பற்றிக் கூறுகையில் தமிழின் சிறப்பையும் நிறுவுகிறார்.
நூலைத் தலைக்காலம், இடைக்காலம், இக்காலம், எதிர்காலம் எனப் பிரித்துக் கொண்டு விரிவாக ஆராயும் ஆசிரியர், தலைக்காலத்தில் குமரி நாடே பாண்டி நாடு என்பதைத் தெளிவுபடுத்துவதுடன், மூன்று கழகங்களையும் (சங்கங்களையும்) நிறுவியவர்கள் பாண்டியரே, முதலிரு கழகங்களும் முற்றும் அந்நியர் தொடர்பற்றன என்பதைச் சங்கப் பாடல்கள், செப்பேடுகள்வழி உறுதி செய்கிறார்.
நூலின் பெரும்பகுதியாகவுள்ள இடைக்காலத்தில்தான் எண்ணற்ற தமிழ் இலக்கியங்கள் இடம் பெறுகின்றன. இவற்றின் வரலாற்றைக் கூறுவதுடன் தொடர்ந்து, நூற்றாண்டுகள்வாரியான நூல்களும் விவரிக்கப்படுவதுடன், தேவைப்படுகிற இடங்களில் அந்தந்த காலகட்டத்தின் சமூக - அரசியல் கட்டமைப்பும் விளக்கப்படுகிறது.
இக்காலம் பற்றிக் குறிப்பிடுகையில் பல தமிழறிஞர்களின் நிலைப்பாட்டைத் தவறெனச் சுட்டி விளக்குவதுடன், எதிர்காலத்தில் தன் விருப்புகளையும் தெரிவிக்கிறார் பாவாணர்.
நூல் முழுவதும் புதிய வாசகர்களுக்கு எண்ணற்ற அரிய, புதிய தமிழ்ச் சொற்கள் அறிமுகமாகின்றன. தேவைப்படுகிற இடங்களில் சொற்களின் பிறப்பு பற்றிய வரலாற்றையும் குறிப்பிடுகிறார் ஆசிரியர். இந்த நூல் தமிழின் வரலாறு, தமிழர்களின் வரலாறு என்றாலும் மிகையில்லை.