பண்பாட்டு விழுமியங்கள்
பண்பாட்டு விழுமியங்கள் - சிவ.விவேகானந்தன்; பக். 362; ரூ.400; காவ்யா, சென்னை- 24; 044-2372 6882.
தில்லி பல்கலை. பேராசிரியரான நூலாசிரியர் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய ஆய்வு கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். தமிழர்களின் பெருமைகளையும், கலாசாரத்தின் சிறப்புகளையும் 18 கட்டுரைகளில் வரிக்கு வரி அழகுற விவரித்துள்ளார். ராமாயணம், மகாபாரதம் பற்றி சுருக்க வடிவில் சில கட்டுரைகள் சிறப்புடையது.
காளை மாடுகள், குதிரைகள் தமிழர்களது வரலாற்றில் பெற்றுள்ள சிறப்பான இடத்தை அறிய முடிகிறது. குதிரைகளுக்கு ஏன் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்ற கேள்வியும் படிக்கும்போது எழுகிறது.
மந்திரவாதி காளிப்புலையன் என்ற கட்டுரையில் மந்திரத்தில் அழிந்த மந்திரவாதிகள் என்பதைப் படிக்கும்போது, அந்தக் காலத்தில் மந்திர- தந்திரங்களால் பலர் சீரழிந்தது குறித்த விவரங்கள் ஆச்சரியப்படவைக்கிறன. நாயக்கப் படைத் தளபதி அழகப்பன் முதலியார் குறித்த கட்டுரையில், மன்னர்கள், தளபதிகளின் வீரத்தைப் படிக்கும்போது, மெய்சிலிர்க்கிறது.
எளிய முறையிலான மருத்துவக் குறிப்புகள் சமையலறையையே மருந்தகமாகப் பயன்படுத்தலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
தமிழர்களின் பண்பாட்டில் திருவிளக்குகளின் முக்கியத்துவம் குறித்து படிக்கும்போது, மலைக்க வைக்கிறது. பண்டையத் தமிழர்கள் ஆன்மிகத்தில் எவ்வாறு சிறப்புற விளங்கியிருக்கிறார்கள் என்பதை அருமையாக நூலாசிரியர் விளக்கியுள்ளார். தமிழர் பண்பாட்டு முறைகளை அறிய விரும்புவோர் படித்து, நினைவில் கொள்ள வேண்டிய நூல் இது.