பாதை தவறிய பயணங்கள்
பாதை தவறிய பயணங்கள் - கப்பியறை வ.இராயப்பன்; பக்.274; ரூ.280; காவ்யா, சென்னை-24; ✆ 044- 2372 6882.
ஆயிரமாயிரம் நூல்கள் வெளிவந்தாலும் வாழ்க்கையின் அர்த்தத்தையும், வாழ்க்கையையும் வலியுறுத்துவது ஒரு சில நூல்கள் மட்டுமே! அந்த வகையில், வாழ்க்கையை நல்ல முறையில் வகுத்துக்கொள்வது, பாதை தவறினால் ஏற்படும் விளைவுகள் போன்றவை குறித்து அற்புதமான முறையில் விளக்கியுள்ள நூலாசிரியரின் இந்த நூல் சிறப்புமிக்கது.
குடும்பம், தேசம், ஆன்மிகம், தனிநபர் வாழ்க்கை, சமூக நலன், மனித நேயம், மத நல்லிணக்கம், கல்வி, சமூக ஊடகங்கள், அரசியல் இயற்கை வளம், மருத்துவம் உள்ளிட்டவற்றை உள்படுத்தி, 61தலைப்புகளில் 60 விதமான கருத்துகளை சுருக்கமாகவும், தெளிவாகவும் விவரிக்கிறது இந்த நூல்.
வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் இடையூறுகளைக் கடந்து சாதிப்பது எப்படி? தடைகளைத் தகர்த்தெறிந்து லட்சியத்தை அடைவது எப்படி? என்பது குறித்து நூலாசிரியரின் எழுத்துகள் படிக்கப் படிக்க தன்னம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
'விரும்பியது கிடைக்காவிட்டாலும் கிடைத்ததைக் கொண்டு மனநிறைவுடன் மகிழ்ச்சியாக வாழுங்கள்' என்ற கருத்தை மையப்படுத்தி உள்ள கட்டுரைகளைப் படிக்கும்போது, நம் மனதில் தேவையின்றி இருக்கும் குழப்பங்கள் அகல்கின்றன.
சிதைவுறும் குடும்ப உறவுகள், மறந்து போன மதிப்பீட்டுக் கல்வி, கேலிக்குள்ளாகும் திருமணங்கள், எது நாகரிகம், உதவும் உள்ளங்கள்.. உள்பட 60 கட்டுரைகளை வாசித்து முடித்தால், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற புத்துணர்வு ஏற்படுகிறது. சலிப்பு இல்லாமல் வாசிக்கத் தோன்றுகிறது. இளைய தலைமுறையினருக்கு இந்த நூல் வரப்பிரசாதம்.