முகப்பு
தினமணி கதிர்

பேல்பூரி

'வலிக்காத வாழ்க்கை இனிக்காது...'

Updated On : 7 மார்ச், 2026 at 5:02 PM
பகிர்:

கண்டது

(திண்டுக்கல்லில் லாரி ஒன்றில் காணப்பட்ட வாசகம்)

'வலிக்காத வாழ்க்கை இனிக்காது...'

-வெ.கார்த்திகா, திண்டுக்கல்.

(கரூரில் ஆட்டோ ஒன்றில் கண்ட வாசகம்)

'உதவாதவருக்குப் பாடமாகவும்

உதவியவருக்குப் பாலமாகவும் இருக்க வேண்டும்!'

-எம் அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

(மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே உள்ள ஓர் ஊரின் பெயர்)

'கிடாத்தலைமேடு.'

-வீர.செல்வம், பந்தநல்லூர்.

கேட்டது

(திருச்சியில் நகரப் பேருந்தில் இருவர்)

'என்னங்க... கால் வைக்கக் கொஞ்சம் இடம் கொடுங்க...'

'விரல் வைக்கக்கூட இடம் இல்லாத இடத்துலதான் நான் நிக்கிறேன்... உங்க கால் வைக்க இடத்துக்கு எங்கே போவேன்?'

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

(பெருங்களத்தூரில் அபார்ட்மென்ட் ஒன்றில் இருவர் பேசிக் கொண்டது)

'ஏன் சார்... வேலை தேடுபவர்கள்தான் விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருப்பார்கள்; ஆசிரியர் வேலையில் உள்ள நீங்களுமா?'

'வேறென்ன செய்யறது... கிடைச்ச வேலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டாமா?'

-எம்.ரவீந்திரன், திருமருகல்.

(பல்லாவரம் கன்டோன்மன்ட் பூங்காவில் கேட்டது)

'என்னால தினம் 2 கி.மீ. தூரம் நடக்க முடியலை, சார்!'

'அப்படின்னா, ஒரு கி.மீ. தூரம் நடந்துட்டு திரும்பி வந்திடுங்க!'

-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.

யோசிக்கிறாங்கப்பா!

'அனுபவங்கள் கற்றுத்தராத பாடத்தை

அவமானம் கற்றுத் தரும்!'

- க. பூமலை, நமசிவாயபுரம்.

மைக்ரோ கதை

சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வெளியே வந்த அமரின் காஸ்ட்லி செருப்பு அறுந்துவிட்டது. சாலையோரம் அமர்ந்து செருப்புத் தைத்துக் கொண்டிருந்த பெரியவரிடம் சென்றவன்,

' இந்தா பெருசு... இந்தச் செருப்பை சீக்கிரம் தச்சிக்குடு...' என்று அதிகாரமாகக்கூறி, அவர்முன் செருப்பை அலட்சியமாக உதறினான்.

'உடனே தச்சிக் குடுக்கறேன், சார்...' என்ற பெரியவர், அடுத்த ஐந்து நிமிடத்தில் செருப்பை தைத்துத் துடைத்துக் கொடுத்தார்.

'எவ்வளவு கூலி பெருசு?' என்றவனிடம், 'இருபது ரூபாய் சார்!' என்றார் பெரியவர்.

தன் பாக்கெட்டிலிருந்து நூறு ரூபாயை எடுத்து பெரியவரின் மடியில் போட்டவன், ' பெருசு... மிச்சத்த நீயே வெச்சிக்க!' என்றான் ஏளனமாக.

அந்த நூறு ரூபாயுடன் எழுந்த பெரியவர், 'சார், தப்பா நினைக்காதீங்க... என்னோட கூலி தவிர எந்த தானமும் வேண்டாம். சில்லறை இருந்தா குடுங்க... இல்லைன்னா இந்தப் பக்கம் வரும்போது குடுங்க...' என்ற பெரியவரின் வார்த்தைகள் அமரின் இதயத்தை தீயாகச் சுட்டது.

இனி மற்றவர்களிடம் மதிப்புடனும், வேலையில் நேர்மையாகவும் இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் நடந்தார் அமர்.

-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

எஸ்.எம்.எஸ்.

'தன் விருப்பம் போல கடந்துகொண்டிருப்பது காலம் மட்டுமே!'

-க.அருச்சுனன், செங்கல்பட்டு.

அப்படீங்களா!

சிறு விடியோக்களுக்குப் பெயர்போன இன்ஸ்டாகிராம் இப்போது ஸ்மார்ட் டி.வி.யிலும் இயங்கும் வகையில் புதிய சேவை அறிமுகமாகி உள்ளது.

முதன்முதலில் இந்தச் செயலி அமேஸான் பயர் டி.வி.யில் அறிமுகமானது. அதன்பின்னர் தற்போது கூகுள் டி.வி.யில் அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம் அறிதிறன்பேசிகளில் கண்டுகளித்த விடியோக்களை நாம் இனி டி.வி.க்களிலும் பார்த்து ரசிக்கலாம்.

மெட்டா நிறுவனத்தின் செயலியான இன்ஸ்டாகிராம் இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரபலமானது.

ஸ்மார்ட் டி.வி.க்களில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் இந்தச் செயலியை இயக்க முடியும். தற்போதைக்கு அமெரிக்காவில் அறிமுகமாகி உள்ள இந்தச் சேவை விரைவில் உலகம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

காமெடி-இசை-விளையாட்டு-வாழ்வியல் முறை ஆகியவற்றின் அடிப்படையில் ரீல்ஸ்கள் வரிசைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஒரு ரீல்ஸை இயக்கி விட்டால்போதும், அடுத்தடுத்ததாக தானாக ரீல்ஸ்கள் இயங்குகின்றன. இவை பெரிய திரை டிவிக்களுக்கு ஏற்ப காட்சிப்படுத்தப்படுகிறது.

அறிதிறன்பேசியில் உள்ளதைப்போன்றே நாம் பார்க்கும் ரீல்ஸூக்கு கமெண்ட் செய்யவும், பகிரவும் முடியும்.

-அ.சர்ப்ராஸ்

முழு கட்டுரையைப் படிக்க →