முகப்பு
குழந்தைகள் உலகம்

பேல்பூரி

'ரொம்ப யோசித்தால் அமைதியை இழப்போம்.

Updated On : 1 மார்ச், 2026 at 11:15 AM
பகிர்:

கண்டது

(கோவை - சேலம் புறவழிச் சாலையில் அமைந்திருக்கும் ஆனந்த பவனில் எழுதப்பட்டிருந்த வாசகம்)

'ரொம்ப யோசித்தால் அமைதியை இழப்போம்.

ரொம்ப எதிர்பார்த்தால் சந்தோஷத்தை இழப்போம்.

ரொம்பப் பேசினால் மரியாதையை இழப்போம்.

ரொம்ப நம்பினால் எல்லாத்தையும் இழப்போம்.'

-ஜி.அழகிரிவேல், ஒதியடிக்காடு.

(நாகர்கோவில் பகுதியில் டெம்போவில் கண்ட வாசகம்)

'வாழ்த்துபவனைவிட வாழ வைப்பவனை வணங்கு.'

-அ.இரவீந்திரன், குஞ்சன்விளை.

(கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஓர் ஊரின் பெயர் )

'தாகம்தீர்த்தபுரம்'

- க. பூமலை, நமசிவாயபுரம்.

கேட்டது

(சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பேஷன்ட்டும் கம்பவுண்டரும்...)

'டாக்டரைப் பார்க்கணும், சார்?'

'அவர் ரெண்டு நாள் லீவ் போட்டிருக்கார்.'

'அப்ப நர்ஸையாவது பார்க்கலாமா?'

'அவங்களும் லீவ்தான் சார்!'

'அப்போ நீங்க மட்டும் எதுக்கு இருக்கீங்க?'

'உங்களுக்குப் பதில் சொல்லத்தான்!'

-குலசை நஜிமுதீன், மாம்பாக்கம்.

(திருச்சியில் பிரபல மால் ஒன்றில் இருவர்... )

'எதை எடுத்தாலும் ஒண்ணுக்கு ஒண்ணு இலவசம்னு சொல்றாங்களே?'

'ஒண்ணை மட்டும் கேட்டுப்பாருங்க... சாயம் வெளுத்துடும்.'

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

(கோவை உக்கடத்தில் கணவன் - மனைவி)

'குடி குடியைக் கெடுக்கும்னு விளம்பரம் எழுதி வெச்ச பின்னாடியும் ஏன் இப்படிக் குடிச்சுக் கெடுத்துக்குறாங்க?'

'எங்கள் மேட்ரிமோனியில் இணையுங்கள்; சந்தோஷமாக வாழுங்கள்னு விளம்பரத்தைப் பார்த்து ஏமாறுவது இல்லையா... அப்படித்தான்!'

-எம்.பி.தினேஷ், இடையர்பாளையம்.

யோசிக்கிறாங்கப்பா!

நெருங்கிப் பழகும் நண்பர்களிடம் மரியாதையை எதிர்பார்க்கக் கூடாது; மரியாதை எதிர்பார்க்கும் நண்பர்களிடம் நெருங்கிப் பழகக் கூடாது!

-எல். மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி.

மைக்ரோ கதை

ரவுடி ரங்கசாமிக்கு திருமணம் நடந்தது. தன்னுடைய அரிவாளுக்கு ஒருமாதம் லீவு கொடுத்துவிட்டான்.

மோகம் முப்பது நாள் முடிந்துவிட்டது. மறுநாளே அவன் 'பொருளை' கையிலெடுக்க வேண்டிய சூழ்நிலை.

'நானே வந்து அவன் தலையைச் சீவிடறேன்' என்று சொன்னவன், வீட்டுக்குள் நுழைந்து அரிவாளைத் தேடினான்.

அவனிடமிருந்த ஆறு திருப்பாச்சி அரிவாள்களுள் ஒன்றையும் காணவில்லை.

வேறு வழியின்றி புது மனைவி வீராயிடமே கேட்டுவிட்டான்.

அதற்கு அவள், 'நேத்து பேரீச்சம்பழம் தந்தேனே... சாப்பிட்டுட்டு நல்லாயிருக்குன்னீயே?' என்றாள்.

'ஆமா . . . அதுக்கென்ன?'

'அதுக்கென்னவா... அந்த அரிவாளையெல்லாம் போட்டு வாங்கினது தான் அந்தப் பேரீச்சம்பழம். இதுவரை நீ எப்படி இருந்தியோ... சரி. ஆனா, இனி குடும்பம் இருக்கறதை மறந்து அரிவாள், வெட்டு, குத்துன்னு போனா... நானே அதையெல்லாம் தூக்கவேண்டிவரும். உள்ளே போ!' என்றாள் வீராயி வீரமாக.

ரங்கசாமி 'கப்சிப்'பானான்.

-வசீகரன், தேனாம்பேட்டை.

எஸ்எம்எஸ்

'புத்தகங்கள் போதி மரம்...

புரட்டிப் பார் ஞானம் தரும்!'

-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

அப்படீங்களா!

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சர்வம் ஏ.ஐ. செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகமாகி உள்ளது. புத்தாக்க நிறுவனமான சர்வம் இதனை தயாரித்துள்ளது.

சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தின் முன்னாள் ஆய்வு மாணவர்களான விவேக் ராகவன், பிரத்யூஷ் குமார் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்தச் செயலி மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சாட்ஜிபிடி, கூகுளின் ஜெமினிக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது.

பொதுவாக கூகுள் போன்ற பெரு நிறுவனங்கள் உருவாக்கும் சாட்பாட்களை அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அறிமுகம் செய்து, அதன் செயலாக்கத்தைச் சோதிப்பார்கள். அவை இந்தியர்களின் மொழி, கலாசாரத்துக்கு முழுமையாக ஒத்துப்போவதில்லை.

இதுபோன்ற வெளிநாட்டு நிறுவனங்களை நம்பி இருக்காமல் இந்திய கலாசாரத்தின் அடிப்படையில் முழுமையாக இயங்கும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை சர்வம் ஏ.ஐ. உருவாக்கி உள்ளது.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம்,

கன்னடம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, ஒடியா ஆகிய இந்திய மொழிகளில் குறைந்த செலவில் சாதாரண கணினி, கைப்பேசிகளில் இயங்கும் வகையில் இந்த சர்வம் சாட்பாட் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

எழுத்துகளை ஒலி வடிவாக மாற்றும் தொழில்நுட்பத்தை 11 இந்திய மொழிகளில் 35 விதமான குரல்களில் மனிதர்களைப் போல் பேசும் சேவையும் இந்த சர்வம் வழங்குகிறது.

தமிழியில் ஏ.ஐ. தரவு மையம் அமைக்க சர்வம் நிறுவனம் தமிழக அரசுடன் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

சாட்ஜிபிடி, ஜெமினிக்கு இணையாக தகவல்களை ஒருங்கிணைத்து இந்திய மொழிகளில் சர்வம் செயலி அளிக்கிறது. இதன் மூலம் ஆங்கிலத்தில் உள்ள ஆவணங்களை தேவையான இந்திய மொழிகளில் எளிதாக ஒலி வடிவில் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இது பன்முகத்தன்மை கொண்ட இந்திய தாய்மொழிகளை வளர்க்க உதவும் என்பதால் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

-அ.சர்ப்ராஸ்

முழு கட்டுரையைப் படிக்க →