முகப்பு
தினமணி கதிர்

பேல்பூரி

கூடுதலாய் எதுவும் வேண்டாம்... கூடவே இரு, அதுபோதும்.

Updated On : 28 மார்ச், 2026 at 10:36 PM
பகிர்:

கண்டது

(சென்னை எம். ஜி. ஆர். நகரில் நின்றிருந்த ஒரு ஷேர் ஆட்டோவின் முன்புறம் எழுதியிருந்த வாசகம் )

'கூடுதலாய் எதுவும் வேண்டாம்...

கூடவே இரு, அதுபோதும்.'

- க. பூமலை, நமசிவாயபுரம்.

(பொன்னமராவதி- புதுக்கோட்டை வழித்தடத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர்)

'நரியன்காடு.'

-அ.கருப்பையா, பொன்னமராவதி.

(தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் ஓர் ஊரின் பெயர்)

'ஆளடிக்குமுளை.'

-பொன்னியின் செல்வன், தஞ்சாவூர்.

கேட்டது

(விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் இருவர் பேசியது)

'என் குழந்தைக்கு ஊசிபோடும்போது, அழாமல் இருக்க டாக்டர் மில்க் சாக்லெட் தந்தாரு...'

'அதை ஏன் வருத்தமா சொல்றே?'

'அந்த சாக்லெட்டுக்கும் சேர்த்து ஃபீஸ் வாங்கிட்டாரு!'

-கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.

(திருச்சியில் பூங்கா ஒன்றில் இருவர்)

'சீரியல் பார்த்து என் மனைவி நேரத்தை வீணடிக்கமாட்டாள்...'

'பரவாயில்லையே?'

'ஆனா, சீரியல் கதையை மத்தவங்க சொல்லக் கேட்பாள்!'

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

(கோவை கே . கே. புதூரில் இருவீட்டார் பேசியது)

'நாங்க குடும்பத்தோடு ஊருக்குப் போற விஷயத்தை ஏன் அக்கறையா விசாரிக்கிறீங்க?'

'உங்க வீட்டு சிலிண்டரை இரவல் கேட்கலாம்னுதான்!'

-எம்.பி.தினேஷ், இடையர்பாளையம்.

யோசிக்கிறாங்கப்பா!

'கோபத்தில் முடிவெடுக்காதீர்கள். மகிழ்ச்சியில் வாக்குறுதி அளிக்காதீர்கள். இதுவே வாழ்வின் சூத்திரம்.'

-த.நாகராஜன், சிவகாசி.

மைக்ரோ கதை

'இந்தத் தெரு நாய்களைப் பிடிக்க கார்ப்பரேஷன்ல புகார் கொடுங்க... பிள்ளைங்க விளையாடப் பயப்படுறாங்க' என்ற மனைவியின் வற்புறுத்தலால், அரைமனதோடு ஆன்லைனில் புகார் அளித்தேன். வாயில்லா ஜீவன்களைக் காட்டிக்கொடுப்பது உறுத்தலாகவே இருந்தது. இரண்டு நாளில் மாநகராட்சி வாகனம் வந்தது. '45 நாள்ல கருத்தடை செஞ்சுட்டு இங்கயே விட்ருவோம்' என்று சொல்லி, மாநகராட்சி ஊழியர்கள் நாய்வண்டியில் நாய்களை ஏற்றிச் சென்றனர்.

அடுத்த சில வாரங்கள் தெருவில் நிசப்தம். அந்த அமைதியைப் பயன்படுத்தித் திருடர்கள் கைவரிசையைக் காட்டத் தொடங்கினர். வீடுகளில் பல பொருள்கள் காணாமல் போனது. சரியாக நாற்பத்தைந்தாம் நாள். நான் அலுவலகம் முடிந்து வீடு திரும்பியபோது வாசலில் அதே நாய்கள்! என்னைக் கண்டதும் பழைய பாசத்துடன் வாலாட்டின.

உள்ளே நுழைந்ததும் மனைவி படபடப்புடன், 'தெரியுமாங்க... இன்னைக்குத் திருட வந்தவர்களை இந்த நாய்கள் துரத்தி ஊரையே கூட்டிடுச்சு. இவங்க நம்ம தெருவுக்குப் பாதுகாப்புதான்!' என்றாள்.

-த.ராம் மோகன், சென்னை.

எஸ்.எம்.எஸ்.

'ஒரு குக்கரைப்போல் இருங்கள். பிரஷர் அதிகமாகும்போது விசிலடித்துக்கொண்டாடுங்கள்!'

-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.

அப்படீங்களா!

ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் முக்கிய பிரமுகர்களின் பெயரில் போலியான வீடியோக்கள் மிகைப்படுத்தியும், அவதூறாகவும், கேலியாகச் சித்திரித்தும் அதிவேகமாகப் பரவுகின்றன. இதுபோன்ற வீடியோக்கள் வந்தால், அதன் உண்மைத்தன்மையை 'பேஸ்ஆஃப்' எனும் இணையதளத்தின் உதவியால் அறியலாம்.

ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவரின் புகைப்படத்தை போலியான வாட்ஸ் ஆஃப் கணக்கை உருவாக்கி, நண்பர்களுக்கு போன் செய்து பணம் பறிக்கும் செயலிலும் பலர் ஈடுபடுகின்றனர்.

இதுதவிர, நீதிமன்றங்கள், காவல் நிலையங்களைப் போலியாக உருவாக்கி, ஒருவரை வாட்ஸ் ஆப் வாயிலாக அழைத்து, பணம் பறிக்கும் செயலும் நடைபெறுகிறது. 'சாட்ஜிபிடி'யில் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதால் ஏற்படும் பாதிப்புகள்தான். ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் அதிகஅளவில் பயன்கள் இருந்தாலும், அதில் கவனமாக இருப்பது நல்லது.

ஹர்ஷா இ.தென்னரசு, சைபர் கிரைம் ஆராய்ச்சியாளர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.