பேல்பூரி
டாக்டர் தொழிலையே விட்டுடலாம்னு இருக்கேன்
கண்டது
(பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
'திம்மங்குத்து.'
-கே.கவின், ஜமின் ஊத்துக்குளி.
(சென்னை திருநீர்மலை மெயின் ரோட்டில் சென்ற லாரி ஒன்றின் பின்னால் கண்ட வாசகம்)
'உனக்காக உண்...
பிறருக்காக உடுத்து...
எல்லாருக்குமாக உழை!'
-நெ.இராமகிருஷ்ணன், சென்னை.
(தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள ஓர் ஊரின் பெயர்)
'பொய்யுண்டார்கோட்டை.'
-வி.பி.மகராசி, தஞ்சை.
கேட்டது
(திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் மருத்துவரும், அவரது நண்பரும்)
'டாக்டர் தொழிலையே விட்டுடலாம்னு இருக்கேன்.'
'ஏன்டா, பேஷன்ட் யாரும் வர்றதில்லையா?'
'வர்றாங்க... ஆனா பிழைக்கிறது இல்லையே!'
'டாக்டர் தொழில்ல நீ மட்டும்தான் வாழறே...'
-விமலா சடையப்பன், காளனம்பட்டி.
(திருச்சி பேருந்து நிலையத்தில் தம்பதி பேசியது)
'வீட்டிலேயே ஜூஸ் சாப்பிடுன்னா கேட்டீயா?'
'ஜூஸா?'
'ஆமாம், ஒரு சொம்பு நீராகாரம் கொடுத்தால் வேண்டாம்னே... இப்ப காசு கொடுத்து ஜூஸ் சாப்பிடலாம்கிறீயே?'
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
(கோவை கே .கே .புதூரில் இருவர்)
'மெடிக்கல் ஷாப்பில் போயி உங்க பேனா எழுதுதான்னு கிறுக்கிப் பார்த்தது தப்பாப் போச்சா, ஏன் ?'
'நான் கிறுக்கி வச்ச பேப்பரை எடுத்துட்டுப் போய் மூணு விதமான மருந்து கொடுத்திட்டாங்க !'
-எம்.பி.தினேஷ், இடையர்பாளையம்.
யோசிக்கிறாங்கப்பா!
'வாழ்க்கையின் முதல் பாதி பெற்றோராலும்,
இரண்டாவது பாதி குழந்தைகளாலும் முடிவடைய வேண்டும்.'
-இதயக்கனி பாரூக், தூத்துக்குடி.
மைக்ரோ கதை
'அப்பா, இந்த வயசுலயும் நீங்க வேலைக்குப் போகணுமா? நீங்க கூலி வேலை செய்து கஷ்டப்பட்டு என்னையும், தம்பியையும் படிக்க வெச்சு ஆளாக்கினீங்க. இப்பதான் நாங்க கைநிறைய சம்பாதிக்கிறோம். சொந்த வீடு, கார்னு வசதியா இருக்கோம். இந்த மூட்டைத் தூக்கற வேலைய விட்டுட்டு ரெஸ்ட் எடுங்கப்பா!' என்றான் மகன் அழகு அப்பாவிடம்.
'டேய் அழகு... நேர்மையா உழைக்கிற எந்த வேலையும் கேவலமில்லை. நான் உயிரோடு இருக்கும் வரை வேலைக்குப் போவேன்...' என்று உறுதியாகச் சொன்னவரிடம், 'அதான் நாங்க சம்பாதிக்கிறோமே... உங்களுக்குச் சாப்பாடு போடமாட்டோமா?' என்றான் அழகு.
'மனுஷங்களைத் தவிர எந்த உயிரினமும் அதோட வாரிசுகளைச் சார்ந்து இருக்கிறதுல்ல. இயற்கையின் விதிப்படிதான் இயங்குது. எனக்கும் அதேமாதிரி உழைக்காம உங்களைச் சார்ந்து வாழப் பிடிக்கல. உழைச்சி வாழறதுல இருக்கற திருப்தி சார்ந்து வாழறதுல துளியும் இருக்காது. எப்பவும் நான் யாருக்கும் பாரமா இருக்க மாட்டேன்' என்று சொல்லிவிட்டு கம்பீரமாக நடந்து போகும் அப்பாவை பிரமிப்பாகவும் பெருமையாகவும் பார்த்தான் அழகு.
-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
எஸ்.எம்.எஸ்.
'எல்லோருக்கும் இதயம் ஓரிடத்தில்தான்...
ஆனால் இரக்கத்தின் அளவுதான் வேறு வேறு...'
-த.சீ.பாலு, சென்னை.
அப்படீங்களா!
அறிதிறன்பேசியில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் செயலியாக 'கூகுள் மேப்ஸ்' வழிகாட்டி செயலி உள்ளது. இதில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் முக்கியமான அப்டேட்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
கூகுள் மேப்பில் இடத்தையோ அல்லது முகவரியையோ பதிவிட்டால் வழிகாட்டுவது வழக்கம். தற்போது பல்வேறு கேள்விகளுடன் கட்டளையிட்டால் 'கூகுள் மேப்' அதற்கு ஏற்ப வழியையும் ஆலோசனைகளையும் வழங்கும்.
மின்சார காரை இயக்கும் ஒருவர், கூகுளிடம் போகும் வழியில் கூட்டமில்லாத சார்ஜிங் ஸ்டேஷன் டீ, காபியுடன் கூடி இடத்தை தெரிவிக்கவும் எனக் கேள்வி கேட்கலாம்.
இதேபோன்று, நீண்டநேர நெடுஞ்சாலைப் பயணத்தில் எங்கு நிற்க வேண்டும், என்ன வகையிலான உணவகங்கள் உள்ளன என்பது குறித்து கூகுளிடம் கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
செயற்கை நுண்ணறிவுடன் இந்தச் சேவையைப் பயன்படுத்தி தற்போதைக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கேள்வி எழுப்பலாம். இந்தச் சேவையைப் பயன்படுத்த முதலில் 'கூகுள் மேப்ஸ்' செயலியை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் கூகுள் மேப்ஸ் செயலிக்குள் சென்று சர்ச்சில் கேள்விகளைக் கேட்கலாம். இதில் உங்கள் பயணத் திட்டத்தை முழுமையாகத் தெரிவித்துவிட்டு, அதில் எங்கு மெட்ரோ ரயிலைப் பயன்படுத்தலாம் அல்லது எங்கு கூட்டம் இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்தலாம் அல்லது எங்கு காபி கடையைப் பாக்கலாம் என்பதை கூகுள் மேப்ஸில் ஒரே கேள்வியாக கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இதேபோல் சுற்றுலா செல்லும் திட்டத்தையும் தெரிவித்து தேவையான தககவல்களைப் பெறலாம்.
மேலும், கூகுள் மேப் படத்தை முப்பரிமான - 3டி வடிவில் காணும் சேவையையும் கூகுள் அறிமுகம் செய்துள்ளது.
-அ.சர்ப்ராஸ்