கண்டது
(ஆவடியில் ஆட்டோ ஒன்றில் கண்ட வாசகம்...)
'உண்மை வழியில் செல்பவனை எப்போதும் உதைத்து விளையாடுது உலகம்.'
ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
(மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகேயுள்ள ஒரு கிராமத்தின் பெயர்...)
'குதிரைகுத்தி'
ம.கிருஷ்ணா, மயிலாடுதுறை.
(திருவள்ளூர் அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்...)
'சேலை.'
நெ.இராமகிருஷ்ணன், சென்னை.
கேட்டது
(திருச்சி தில்லைநகரில் இருவர்...)
'வீட்டுல சில சமயம் டி.வி.யை டக்குன்னு ஆஃப் பண்ணிடுவோம்...'
'உங்க பையன் படிக்க உட்கார்ந்தவுடனேயா?'
'பக்கத்து வீட்டுல சண்டை ஆரம்பிச்சவுடனே!'
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
(விழுப்புரம் அருகேயுள்ள கிராமத்தில் இருவர் பேசியது...)
'நான் இந்த ஊருக்குப் பிழைப்புத் தேடி வந்திருக்கேன், சார்!'
'உங்க பிழைப்பை எந்த ஊர்ல தொலைச்சிட்டு அதை இங்கே தேடி வந்திருக்கீங்க?'
இந்துகுமரப்பன், விழுப்புரம்.
(நாகப்பட்டினம் மாரியம்மன் கோவிலில் இரண்டு பெண்கள்)
'இந்த எலெக்சன் சீக்கிரம் வந்துச்சுன்னா தேவலாம்...'
'நீ ஏன் எலெக்சனைப் பத்திக் கவலைப்படுறே?'
'செலவு இருக்கு. வர்ற பணத்தை வச்சுத்தான் சமாளிக்கணும்... வேற எதுக்குக் கவலைப்படப்போறேன்?'
நாகஜோதி செந்தில்குமார், நாகப்பட்டினம்.
யோசிக்கிறாங்கப்பா!
குறை சொல்ல ஆயிரம் காரணம் இருக்கலாம்;
மன்னிக்க ஒரே காரணம்... அன்பு மட்டும்தான்!
த.நாகராஜன், சிவகாசி.
மைக்ரோ கதை
மைதிலி தன் ஐந்து வயது மகன் குமாரின் யூனிபார்மை துவைக்க எடுத்தபோது, பேன்ட் பையில் இருந்த அவளின் ஒரு கால் மெட்டியைப் பார்த்துத் திகைத்தாள்.
ஒரு வாரமாகத் தேடிக்கொண்டிருந்த அந்த மெட்டியைக் கழுவி சுத்தம் செய்வதற்காக ஒரு கிண்ணத்தில் போட்டு கிச்சனில் வைத்திருந்தாள்.
அதைக் காணவில்லை என்றதும் வேலைக்காரப் பெண் கோமதி மேல் சந்தேகப்பட்டு, அவளைக் கேட்கலாம் என நினைத்து, அதுகுறித்து கணவனிடம் ஆலோசித்திருந்தாள்.
அதற்கு கணவரோ, 'சட்டென்று யாரையும் சந்தேகப்பட்டு திருட்டுப்பட்டம் கட்டிவிடாதே! வார்த்தையை விட்டால், அதைத் திரும்பப் பெறமுடியாது; பொறுமையாகத் தேடு!' என்று சொன்னது நினைவுக்கு வந்தது.
கணவரை நினைத்துப் பெருமைப்பட்டாள் மைதிலி.
கே. நாகலட்சுமி, உள்ளகரம்.
எஸ்.எம்.எஸ்.
அலைகள் இல்லா கடல் இல்லை;
பிரச்னைகள் இல்லா வாழ்க்கையும் இல்லை!
எம்.ரவீந்திரன், திருமருகல்.
அப்படீங்களா!
வாட்ஸ் ஆப்பில் மூன்று புதிய சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவில் பயனாளர்கள் வெவ்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள். அந்தந்தக் குழுக்களில் எந்த அடிப்படையில் ஆலோசனை நடத்துகிறோமோ அதற்கு ஏற்ப உங்களின் பெயரை மாற்றி அமைக்கும் 'மெம்பர் டெக்ஸ்' என்ற சேவை அறிமுகமாகி உள்ளது.
இதில், உறுப்பினர்கள் குழுவுக்கு ஏற்ப தங்களின் பெயர்களை மாற்றி வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, பணியிடம் என்றால் 'குழுத் தலைவர்' என்றும், பள்ளிக் குழு என்றால் 'மகனின் பெயரைக் குறிப்பட்டு தந்தை' என்றும் மாற்றி வைத்துக்கொள்ளலாம். இதனால் குழுவில் பயனாளர்களுக்கு ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்கலாம்.
அதேபோல், எந்த ஒரு வார்த்தையையும் ஸ்டிக்கர் வடிவில் மாற்றும் 'ஸ்டிக்கர் செர்ச்' என்ற புதிய சேவை அறிமுகமாகி உள்ளது.
அதேபோல், கூட்டங்கள், அழைப்புகள், கொண்டாட்ட தேதிகளைப் பதிவிட்டால் அதை ஞாபகப்படுத்தும் சேவையும் அறிமுகமாகி உள்ளது. குழு அழைப்புகளை மேம்படுத்த இந்தச் சேவைகளை அறிமுகம் செய்துள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவை பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து விரிவாக்கம் செய்யப்படும் என்றும் வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.
அ.சர்ப்ராஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.