அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே
அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே - எம்.ஜி.சுரேஷ் ; பக். 82; ரூ.100; அடையாளம், புத்தாநத்தம் (திருச்சி மாவட்டம்); ✆ 04332-273444.
மொழித் தூய்மை என்னும் குறுகலான கட்டத்துக்குள் இருந்து கொண்டு தத்துவ இயலில் அசலாக சிந்தித்து எழுத வேண்டி உள்ளது. அந்த வகையில் இது நல்லதோர் அறிமுக நூல்.
ஐரோப்பிய மறுமலர்ச்சி, தொழிற்புரட்சி காலகட்டத்திற்குப் பிறகு, மரபுகளை கேள்விக்கு உள்ளாக்கும் நவீனத்துவம் தொடங்குகிறது. 20-ஆம் நூற்றாண்டுக்குள் அடியெடுத்து வைக்கும்போது நவீனத்துவத்தை கடந்து பின்நவீனத்துவம் என்ற சிந்தனை தொடங்குகிறது.
அரசியலால் விளைந்த பெரும் போர்கள், அறிவியலால் நிகழ்ந்த பெரும் வளர்ச்சிகள் ஆகியவற்றில் சலித்துப்போய், மேற்கத்திய சிந்தனை உலகில் 'பின்-பின் நவீனத்துவமும்' வந்துவிட்டது! இந்த நூல் ஏறக்குறைய முற்றிலும் ஐரோப்பிய சிந்தனை மரபு சார்ந்ததாகவே இருக்கிறது.
'பழைய கோட்பாடு கடவுளை மையமாக்கினால், புதிய கோட்பாடு பகுத்தறிவை மையமாக்குகிறது' எனக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.
சடங்குகள் உள்ளிட்ட சித்தாந்த மரபுகளை நிராகரித்த சார்வாகம் என்ற சிந்தனையும் இந்திய தத்துவ இயல் வரலாற்றில் காணக் கிடைக்கிறது. இதனை இன்றைய 'பகுத்தறிவு' வாதத்துடன் ஓரளவுக்கு ஒப்பிடலாம். பாரதியார் கவிதைகளில் நவீனத்துவமும் உண்டு, வசன கவிதைகளில் பின்நவீனத்துவமும் உண்டு. இவை போதிய அளவு இந்த நூலில் கவனம் பெறவில்லை.
மேற்கத்திய சித்தாந்தத்தின் நெடிய வரலாறு பின்நவீனத்துவமாக பரிணமிக்கும் வரை எளிய மொழியில் கோடிட்டுக் காட்டும் இந்த நூல், சாதாரண வாசகனுக்கு தத்துவ நூல்களுக்கான நுழைவு வாயில் ஆகிறது.