அப்பாக்கள் பலவிதம்
அப்பாக்கள் பலவிதம் - (தொகுப்பாசிரியர்) இடைமருதூர் கி.மஞ்சுளா; பக்.352; ரூ.350; மணிவாசகர் பதிப்பகம், சென்னை- 104; ✆ 9380530884.
அப்பாவை மையப்படுத்தி வார, மாத இதழ்களில் எழுதப்பட்டது; புதிதாக எழுதப்பட்டது என 38 சிறுகதைகளின் தொகுப்பே இந்த நூல். மனமுவந்து தன்னைப் பராமரிக்க முன்வராத மகனுக்காகத் தனது கடைசி கையிருப்பை தாரை வார்த்துவிட்டு, எந்தவொரு முணுமுணுப்பும் இன்றி இயல்பாக இருக்கும் அப்பா (அசட்டு அப்பாக்கள்) நெகிழச் செய்கிறார்.
மதுவுக்கு அடிமையானதால் குடும்பம் குறித்த அக்கறையின்றி வீட்டுக்கே வராத அப்பாவை புறக்கணிக்கத் தயாராகும் குடும்பம் (அப்பாவின் சைக்கிள்), தனக்கு இரண்டு அப்பாக்கள் என்று சுகந்தியும்; தனக்கு மூன்று அப்பாக்கள் என்று கூறும் வித்யாவும் கலகலப்பூட்டினாலும் இவ்விரு கதைகளின் மையக்கரு (வித்தியாவுக்கு மூன்று அப்பாக்கள்) அப்பாக்களின் குரூரத்தை வெளிப்படுதுகின்றன.
இத்தொகுப்பிலுள்ள எல்லா அப்பாக்களும் ஒன்றுபோல் இல்லை; ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு கோணத்தில் அப்பாவை படம் பிடித்துக் காட்டுகின்றன.
தந்தை இறந்தபிறகு அவரை நினைத்து ஏங்குவதைவிட, இருக்கும்போதே மரியாதை செய்ய வேண்டும். பெருமைப்பட முடியாத சில குணங்கள் ஒருசில அப்பாக்களிடம் இருந்தாலும் அவர்கள் கொண்டாடப்பட வேண்டியவர்தான் என்பது காலம் கடந்த பிறகுதான் அநேகருக்குப் புரிகிறது என்பதை இத்தொகுப்பு எடுத்தியம்புகிறது.
அப்பாவிடம் அலட்சியத்துடன் நடந்துகொள்வோரை அவரை நேசிக்க வைக்கவும், அப்பாவின் குறைகளைப் புறந்தள்ளி அவரைப் புரிந்துகொள்ளவும் இந்த நூல் வழிகாட்டுகிறது.