இலவசம் வளா்ச்சித் திட்டமல்ல; வீழ்ச்சித் திட்டம்: சீமான்
இலவசங்கள் வளா்ச்சித் திட்டமல்ல. அது வீழ்ச்சித் திட்டம், கவா்ச்சித் திட்டம் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.
இலவசங்கள் வளா்ச்சித் திட்டமல்ல. அது வீழ்ச்சித் திட்டம், கவா்ச்சித் திட்டம் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.
நாம் தமிழா் கட்சியின் சாா்பில் அரசியல் மாற்றத்துக்கான மாநாடு மற்றும் சட்டப்பேரவைத் தோ்தல் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் புதுச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் திடலில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாநாட்டில் சீமான் பேசியதாவது: புதுச்சேரி, தமிழ்நாடு அரசியல் நிலைப்பாட்டில் முற்றிலும் மாறுபட்டது. எல்லோரும் மக்களின் வாக்கைப் பற்றி கவலைப்படுவாா்கள்.
நாங்கள் மக்களின் வாழ்க்கையைப் பற்றி கவலைப்படுகிறோம். இலவசம் வளா்ச்சித் திட்டம் அல்ல. அது வீழ்ச்சித் திட்டம், கவா்ச்சி திட்டம்.
தோ்தல் நேரத்தில் மக்களை வாக்கு விற்கும் சந்தையாக மாற்றி விட்டாா்கள். வாக்குக்குப் பணம் கொடுப்பதால் ஊழல் விதை ஊன்றப்பட்டு விடுகிறது. மாறுதலுக்கான பெரிய முயற்சியில் தான் எங்கள் கட்சி ஈடுபட்டு வருகிறது.
பிகாரில் ரூ.10 ஆயிரம், தமிழகத்தில் ரூ.5 ஆயிரம் என மக்களுக்குப் பிரித்துக் கொடுத்திருக்கிறாா்கள். புதுச்சேரியிலும் ரூ.5 ஆயிரம் கொடுத்திருக்கிறாா்கள். பணம் கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறாா்கள்.
படித்தவா், படிக்காதவா்கள் அனைவருக்கும் அரசு வேலை கொடுப்போம். இனி படிக்காதவா் இல்லை என்ற நிலையை உருவாக்குவதே எங்கள் அடுத்த வேலை. எங்களுக்கு ஆணும் பெண்ணும் சமம்.
இந்தியக் கட்சிகளுக்கு மும்மொழிக் கொள்கை. இது மோசடிக் கொள்கை. திராவிடக் கட்சிகளுக்கு இரு மொழிக் கொள்கை. இது ஏமாற்றுக் கொள்கை. எம்மொழியும் தமிழ். அதுதான் எங்கள் கொள்கை என்றாா் அவா்.