கண்ணன் என் கண்ணின் உளானே-ம.பெ.சீனிவாசன்; பக்.132; ரூ.140; செல்லப்பா பதிப்பகம், மதுரை - 625 001, ✆ 99421 76893.
'கண்ணன் என் கண்ணின் உளானே' தொடங்கி, 'கம்பனில் ஏக்கறவு என்னும் ஒரு சொல்' ஆகிய 30 கட்டுரைகளையும் வாசித்து முடிக்கையில், சங்க இலக்கியம், திருக்குறள், ஆழ்வார் பாசுரங்கள், ஆண்டாள் திருப்பாவை, கம்பராமாயணம், சிற்றிலக்கியம், பாரதியார் பாடல்கள் என சங்கம் முதல் சமகாலம் வரை உலா வந்த நிறைவு ஏற்படுகிறது.
சங்க இலக்கியத்தில் முக்கியமானது அகம்-புறம். நாணயத்துக்கு இருபக்கம்போல, சமூகத்தின் இருபக்கம் அகம் - புறம்தான். அதன் தொடர்ச்சி இலக்கியங்களில் காண முடியும். அகம் மனத்தின் உரமாக இருப்பதைப்போல, நாம் வாழும் சமூகத்துக்கு புற விவகாரங்கள் உரமாக அமைகின்றன. இந்த நூலில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்டுரைகளிலும் அகம் - புறம் இழையோடுவதைக் காணமுடிகிறது.
அகத்திணை மரபுகள், தலைவன் - தலைவி பாவனைகள் இலக்கியத்தில் முக்கியத்துவம் பெறுபவை. ஏனெனில், தலைவன் பிரிவு என்பதே பொருளீட்டுவது, போர் மற்றும் கல்வி ஆகிய பிரிவாக உள்ளவை. இவை தலைவியின் அன்பைப் பலப்படுத்துவது மட்டுமல்ல, சமூகத்தைப் பலப்படுத்துவதுமாகும். அதேவேளை, தமிழ்ச் சமூகம் போரை விரும்பும் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தக் கால தமிழ்ச் சமூகம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இலக்கியத்தில் போர் இடம் பெறத்தான் செய்கிறது.
தமிழில் ஐந்திணை வகைப்பாடு, வாய்மொழி மரபு, இலக்கியம் மரபாகியது, பேச்சு வழக்குகள் ('கால்கட்டு') இலக்கியங்களில் இடம் பெற்றமை, இலக்குத் தப்பாத ராமபாணம், அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?, ஒளவை சொன்ன அர்த்தம், குறிப்பாக, வாழ்வியல் கருத்துகள் அறுபடாமல் புலவர்கள் வழியாகத் தொடர்வது என, இந்த நூலில் சிறுசிறு கட்டுரைகளாக இடம் பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.