சித்தாவரம்-சித்த மருத்துவர் டி.பாஸ்கரன்; பக்.144; ரூ.150; தேநீர் பதிப்பகம், ஜோலார்பேட்டை-635 851, ✆ 90808 09600.
தமிழர் பண்பாடு, நாகரிகம், இயற்கை, உணவு முறைகள் ஆகியற்றுடன் இணைந்தது சித்த மருத்துவம். வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாடி மூலம் இந்த மூன்றின் நிலையை அறிந்து நோய்நிலையைக் கணித்து அதற்கேற்ப மருத்துவம் பார்க்கப்படுகிறது. நூலாசிரியர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக நூல் வெளியாகி இருக்கிறது.
அரச மரத்தின் மருத்துவ குணம், அருகம்புல்லின் மகத்துவம், இதயத்துக்கு நன்மை பயக்கும் வகையில் உணவருந்தும் முறை, எண்ணெய் குளியலுக்கான வரையறைகள், அவற்றால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
குழந்தையின்மை குறைபாட்டைப் போக்க உணவுமுறை சார்ந்த விஷயங்கள் எளிமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும், அதைக் குணப்படுத்தவும் கடைப்பிடிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள் குறித்த தகவல்கள் கவனிக்கத்தக்கவை. பெண்கள் சார்ந்த உடல்நலப் பிரச்னைகளுக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளதை அறிய முடிகிறது. அக உறுப்புகளைச் சீராக்க சீரக நீர், சீரக ரசம் போன்றவை உதவும் என அனைவரும் எளிமையாக பின்பற்றக் கூடிய சித்த மருத்துவக் குறிப்புகள் பயனுள்ளவையாக உள்ளன.
தூக்கமின்மையை தியானம், பிராணாயாமம், மூச்சுப் பயிற்சி மூலம் விரட்டலாம்; ஜாதிக்காயை பயன்படுத்துவதன் மூலமும் தீர்வு காணலாம் போன்ற விவரக் குறிப்புகள் கடைப்பிடிக்கும் வகையில் உள்ளன. பனிக்கால நோய்களை உணவு முறைகள் மூலமும் நெருங்க விடாமல் தடுக்கலாம் என்ற தகவல் புதுமையானது. சித்த மருத்துவம் தொடர்பான எளிமையான குறிப்புகளைக் கொண்ட தொகுப்பு இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.