பெரியண்ணன் எழுதப்படாத வரலாறு- கார்த்திக் சிதம்பரம்; பக்.146; ரூ.150; தெய்வானைப் பதிப்பகம், சென்னை-600 102; ✆ 98849 42539.
தமிழ்நாட்டில் திராவிட சிந்தனைகள் வேரூன்ற, 1940-50-களில் வெளிவந்த இதழ்களும், பத்திரிகைகளும்தான் காரணம். அந்தக் காலகட்டத்தில் முக்கியமான பத்திரிகையாக இருந்த 'பொன்னி' இதழின் நிறுவனர் அரு.பெரியண்ணன் பங்களிப்பும், அவரைப் பற்றிய முழு வரலாற்றையும் அவரது பேரனான நூலாசிரியர் விவரித்துள்ளார்.
'பொன்னி' இதழை தனது அக்கா மகன் முருகு.சுப்பிரமணியத்துடன் இணைந்து பெரியண்ணன் நடத்தியது, மலேசியாவுக்கு முருகு.சுப்பிரமணியன் சென்றும் பெரியண்ணன் பத்திரிகையை நடத்தியது என்று தொடங்கி, குடும்பம், தொழில், பணி, வெளிநாட்டுப் பயணம், தலைவர்களுடனான புகைப்படங்கள், பாரதிதாசன் பரம்பரை என கவிஞர்களை அறிமுகம் செய்யும் பட்டியல் என்று முழு வரலாறும் நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.
பெரியார் ஈ.வெ.ரா., பாரதிதாசன், அறிஞர் அண்ணா, கருணாநிதி, இரா.நெடுஞ்செழியன் போன்ற திராவிடத் தலைவர்கள் 'பொன்னி'யில் எழுதியது, அந்தக் கால பொன்னி இதழ்களின் அட்டைப்படங்கள், பெரியண்ணன் எழுதிய முக்கிய கடிதங்களும் அவருக்கு வந்தவையும், வாரிசுகளின் வாழ்க்கையோடு அவர்களுடைய தலைமுறையினர் பட்டியல், 'முரசொலி'யில் அவரது பணி, ஓய்வுக் காலம், இறுதிப் பயணம் என்று பல்வேறு அரிய தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன. அவர் வகித்த பொறுப்பில் உறுதியாக இருந்தமைக்காக, 'அற்ற குளத்து அறுநீர்ப் பறவை...' என்று கருணாநிதியும், அச்சுத் தொழிலில் இவருக்கு இருந்த அனுபவம் குறித்து கண்ணதாசன் எழுதியவையும் நூலில் சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
தனிநபர் வரலாறாக இல்லாமல், ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய அரசியல், பத்திரிகை, படைப்புலகம், இலக்கியம் போன்ற தகவல்களை உள்ளடக்கிய நூலாகவும் இது விளங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.