ருஷ்யக் கதைகள்- தமிழாக்கம்: நா.பாஸ்கரன்; பக்.296; ரூ.350; முல்லை பதிப்பகம், சென்னை-600 040. ✆ 9840358301.
நீண்ட நெடிய வரலாறு இல்லாத ஒரு சமுதாயத்தை உலக அளவில் பெருமைப்படுத்த இலக்கியவாதிகளால்தான் முடியும் என்பதை ரஷிய எழுத்தாளர்கள் எப்போதோ நிரூபித்திருக்கிறார்கள்.
பிற மொழிக் கதைகளை வாசிக்கும்போது அந்தப் பிரதேசத்தின் பருவநிலைகள், வருணனைகள், அழகியல்கள், உவமைகள், உடையமைப்புகள் என ஒரு மாறுபட்ட கலாசாரச் சூழலை உள்வாங்கும் அனுபவம் நமக்கு வாய்க்கும். அந்த அனுபவத்தை இந்த நூல் தருகிறது.
மொத்தம் 17 கதைகள்; 17 வெவ்வேறு கதாசிரியர்கள் எழுதியவை. உலகப் புகழ்பெற்ற லியோ டால்ஸ்டாய், டாஸ்டாயெவ்ஸ்கி, மார்க்சிம் கார்க்கி, எறன் வொர்க் ஆகியோரின் கதைகளும் இதில் உள்ளன. காதல், வீரம், போராட்டம், சோகம், நீதி உள்ளிட்ட எல்லா தளங்களிலும் கதைகளைக் கொண்டது இந்தத் தொகுப்பு.
ஒவ்வொரு கதையையும் வாசிக்கும்போது ஒவ்வோர் விதமான உணர்வுகள் மனதுக்குள் எழுகின்றன. மூலக் கதையின் சுவாரஸ்யம் குறையாமல் மொழிபெயர்ப்பில் அதே உணர்வு தருவது சாதாரணமான விஷயம் அல்ல.
சிறுகதை என்பது இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற வட்டத்துக்குள் இருந்து வெளிவந்து பார்த்தால், பல சிறுகதைகள் மெல்லிய உணர்வை அடிப்படையாக வைத்தும் படைக்க முடியும் என்பது வியப்பைத் தருகிறது. வனத்தின் இருளோ, கல்லறைத் தோட்டத்தில் உதிர்ந்து கிடக்கும் பழுத்த இலைகளோ ஒரு பெரும் போராட்டக் களத்தை நோக்கி இழுத்துச் செல்லும் நிகழ்வு இந்தப் புத்தகத்தில் சாத்தியமாகி இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.