தொல்லியலும் வரலாற்றுச் சான்றுகளும் - தொகுப்பாசிரியர்கள்: ச. செல்வராஜ், முனைவர் சீ.வசந்தி, வெ.இராமமூர்த்தி; பக்.336; ரூ.330; கங்காராணி பதிப்பகம், பொழிச்சலூர், சென்னை-600 074, ✆ 98840 57267.
தொல்லியல் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து துணை இயக்குநராக வந்த நிலையில் ஓய்வு பெற்றார் கி.ஸ்ரீதரன். அவரின் பணிக்காலத்தில் நான்கு நிகழ்வுகள் முக்கியமானவை. உலோகத் திருமேனிகள், ஓவியங்கள் ரசாயன முறையில் பாதுகாக்கும் பயிற்சியைப் பெற்றதும், தஞ்சை அரண்மனையில் உள்ள மராத்திய கால ஓவியங்கள் வெளிப்படுத்தப்பட்டு, பாதுகாக்கப்பட்டன.
1983 -ஆம் ஆண்டில் அணி சாரா நாடுகள் மாநாட்டில், தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் 'தென்னகத் திருமேனிகள்' கண்காட்சியகத்தில் குறிப்பிட்ட பணிபுரிந்தது, மத்திய அரசின் தொல்லியல் துறை தொடங்கிய ஆய்வில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டக் கோயில்கள், கல்வெட்டுகள், வழிபாட்டில் இல்லாத சிற்பங்கள், உலோகத் திருமேனிகளுக்கு படம் எடுத்து உரிய குறிப்புகளை வெளியிட்டது, இந்து சமய அறநிலையத் துறையில் உள்ள கோயில்களின் தொன்மை, அதன் வரலாறுகளை கல்வெட்டுகள் மூலம் ஆய்வு செய்து, திருப்பணிகள் மேற்கொள்ள கருத்துரு வழங்கியது, இவை நான்கும் தலையாயது என நூலின் மூலம் அறிய முடிகிறது.
நூலில் ஆய்வு அறிஞர்கள் கி.ஸ்ரீதரன் உள்ளிட்ட 35 பேர் எழுதிய கட்டுரைகள் உள்ளன. 'குன்னம் குடிப்பட்டி பெருங்கற்காலச் சின்னங்கள்', 'சிறுகளத்தூர் சிற்பங்கள்', 'நல்லூர் கோயில் கல்வெட்டுகள்', 'வேத மரபிலும் தமிழ் மரபிலும் முருக வழிபாடு', 'சோழ, முத்தரையரின் அரசகுல மகளிர் போன்றே 'கொடும்பாளூர் வேளிர் குல அரசியரின் அறப்பணிகள்', 'காசிக்கு நிகராக முக்தி தரும் ஸ்ரீ வாஞ்சியம் வரலாறு', '1500 ஆண்டுகளுக்கு முன்பு உடற்கொடை அளித்த குமணனின் வரலாறு', 'முத்தரையரின் நீர்ப்பாசன பணிகள்', '3500 ஆண்டுகளுக்கு முந்தைய நீலகிரி பகுதியில் சுடுமண் சிற்பங்கள்'- ஆகிய கட்டுரைகள் சிறந்த தகவல்களை அளிப்பவை.
இறுதியாக ஆய்வாளர் ஸ்ரீதரன் குறித்த வாழ்வும் - பணியும் கட்டுரையும் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆய்வாளர்களுக்கு நல்லதொரு நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.