காந்தி யார்? - வெ.சாமிநாத சர்மா; பக்.216; ரூ.300; புரட்சி பாரதம் பதிப்பகம், ஆவடி, சென்னை-600 055, ✆ 90430 50666.
மோதிலால் நேரு, மகாத்மா காந்தியடிகள் ஆகிய இருவரின் பொதுவாழ்க்கை குறித்தும், இந்திய சுதந்திரத்துக்கு இவ்விருவரும் ஆற்றிய பணிகள் குறித்தும் பருந்துப் பார்வையில் முறையே இரண்டு அத்தியாயங்களில் இந்நூல் விவரிக்கிறது.
பண்டித ஜவாஹர்லால் நேருவின் தந்தை என்கிற அளவில் மட்டுமே பரவலாக அறியப்பட்ட மோதிலால் நேருவின் தியாகம் போற்றுதலுக்குரியது. இந்திய விடுதலை இயக்கத்துக்கு மூளையாகத் திகழ்ந்தவர். இளமையில் செல்வச் செழிப்பில் வாழ்ந்த அவர், தாம் சேர்த்த பெரும் செல்வத்தை முதுமையில் நாட்டுக்காக செலவிட்டதோடு மட்டுமல்லாது, அரண்மனை போன்ற தனது இருப்பிடமான ஆனந்த பவனத்தை இந்திய விடுதலை வேள்விக்கு அர்ப்பணித்தவர். தனது வாழ்நாள் காலத்திலேயே இந்தியா விடுதலை அடைந்துவிடும் என்று இறுதி மூச்சு வரை அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்தவர் என்பதில் இருந்தே இவரது தேசப் பற்று எத்தகையது என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
இந்தியர்களுக்கு தந்தையாக இருந்து விடுதலைப் போரில் வெற்றி கண்டவர் மகாத்மா காந்தி. வீரர்களுக்கும், மகான்களுக்கும் உள்ள திண்மையும், தண்மையும் காந்தியிடம் மிகுந்து காணப்படுவதை இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் எடுத்துரைக்கின்றன. தம்முடைய பொது வாழ்வில் கொள்கைகளுக்கு முரணாக குடும்பம் இருந்தால், குடும்ப உறவையே துண்டித்துக் கொள்ளும் அளவுக்கு மனஉறுதி உடையவராக தம் பாதையை அமைத்துக் கொண்ட உத்தமர் என்பதையும் அறிய முடிகிறது. உலக நாடுகள் எங்கெங்கிலும் நடைபெற்ற, நடைபெறும் அமைதி வழிப் போராட்டத்துக்கு மகாத்மா காந்திதான் முதன்மையானவர் என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.