தில்லையில் தொடரும் தொல்லைகள் - டாக்டர் ந.ராமசுப்ரமணியன், பக்.200; ரூ.250; நடேசன் சாரிட்டிஸ், சென்னை-600 045, ✆ 044 2226 6614.
பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சைகள் குறித்தும், அவற்றின் உண்மைத் தன்மையை விடுத்து மடைமாற்றம் செய்தது குறித்தும், ஆதாரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
திருஞானசம்பந்தர் 44 விதமான தமிழைக் கொண்டு தேவாரம் பாடியுள்ளார் என்கிற தகவலும், தேவாரப் பாடல்களும், அவை கண்டெடுக்கப்பட்ட சிதம்பரம் கோயிலும் தமிழுக்குப் பெருமை சேர்க்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. அந்த தேவாரப் பாடல்களை தில்லைக்கூத்தன் முன்பாக பாட அனுமதி மறுப்பார்களா என்ற நூலாசிரியரின் கேள்வியில் அர்த்தம் இருக்கிறது.
ஹிந்து மதம் குறித்து ஆதிசங்கரரின் பார்வையும், ராமானுஜரின் பார்வையும் எப்படி இருந்தன என்கிற பகுதி பெரும்பாலானோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் நடைபெற்ற விவாதங்களும், மோதல்களும் கோயிலில் ஆதிக்கம் செலுத்த நடந்த நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
தேவாரம் குறித்த தகவல்கள், கோயில் தோன்றிய வரலாற்று மூலங்கள், தங்கக் கூரையின் தாத்பரியம், வைணவர்களின் போர்க் குரல், அரசின் நெருக்கடி, தீட்சிதர்கள் குறித்து பரப்பப்பட்ட செய்திகள் என ஏராளமான தகவல்களுடன் பல நாளிதழ்கள், பருவ இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
தில்லை நடராஜர் கோயில் வழக்கு தொடர்பான ஆவணங்களையும், தீர்ப்புகளின் பிரதிகளையும் அச்சேற்றியுள்ள இந்தப் புத்தகம் முக்கியமான வரலாற்றுக் கையேடு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.