FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

வெளிச்சத்துக்கு வராத விளக்குகள்!

தமிழ்நாட்டில் பிறந்து அரிய கண்டுபிடிப்புகளை நல்கியவரின் பெருமைகளை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்வது அவசியம்.

Updated On : 27 பிப்ரவரி 2026, 4:52 am IST
டாக்டர் கே.எஸ்.கிருஷ்ணன்
பகிர்:

தமிழ்நாட்டில் பிறந்து அரிய கண்டுபிடிப்புகளை நல்கிய இருவரின் பெருமைகளை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்வது அவசியம். இன்றைய விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள விழுப்பனூரில் 1898-இல் பிறந்தவர் டாக்டர் கே.எஸ்.கிருஷ்ணன். வத்திராயிருப்பில் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் தொடக்கக் கல்வியும், ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளிப்படிப்பும், மதுரையில் இன்டர்மீடியட்டும், சென்னையில் இயற்பியலில் இளநிலை பட்டம் பெற்று, மேற்படிப்புக்காக கொல்கத்தா சென்றார்; அங்கு சர் சி.வி.ராமனைச் சந்தித்தார். அவரது ஆய்வு முயற்சியில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார். சர் சி.வி. ராமனுடன் இணைந்து 16 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். 1925-இல் சென்னை பல்கலைக்கழகம் கே.எஸ்.கிருஷ்ணனுக்கு முதுநிலை அறிவியல் பட்டத்தை அளித்தது. 1928-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஏராளமான ஆய்வுகளைச் செய்து, "ராமன் விளைவு' என்றழைக்கப்படும் "ஒளி விலகல்' தத்துவத்தை சர் சி.வி.ராமனுடன் இணைந்து செய்து காட்டி உறுதிப்படுத்தினார். ஆனால், "நேச்சர்' என்ற அறிவியல் இதழுக்கு "ஒளிவிலகல்' குறித்து அனுப்பப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் சர் சி.வி.ராமன் பெயர் மட்டுமே இடம்பெற்றிருந்ததாம்.

"ஒளிவிலகல்' தொடர்பான நோபல் பரிசு விஷயத்தில் வெளிச்சத்துக்கு வராத விளக்காக தன்னை ஓரங்கட்டிக் கொண்டார் கே.எஸ்.கிருஷ்ணன். 1929-இல் டாக்கா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். படிகக் காந்தவியல் குறித்து பல முன்னோடி ஆய்வுக் கருத்துகளை உலகறியச் செய்தார். 1937-இல் கேம்பிரிட்ஜ், லண்டன் மாநகரங்களுக்குச் சென்று பல்வேறு பல்கலைக்கழகங்களில் அறிவியல் தொடர் சொற்பொழிவுகளை ஆற்றினார். லீக் பல்கலைக்கழகத்தின் பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது. 1940-இல் ராயல் சொஸைட்டியில் அங்கத்தினராக தேர்வு செய்யப் பெற்றார். 1942-ல் அலாகாபாத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1946-இல் பிரிட்டிஷ் அரசு அவருக்கு "நைட்ஹட்' பட்டத்தை வழங்கியது.

1950-இல் புதுதில்லியில் நிறுவப்பட்ட தேசிய இயற்பியல் ஆய்வு மையத்தின் நிறுவனர் - இயக்குநர் பொறுப்பை ஏற்றார்.

Advertisement

Advertisement

இந்தியா முழுவதும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மையங்களை உருவாக்கினார். பல்வேறு இந்தியப் பல்கலைக்கழகங்கள் அவருக்கு டாக்டர் பட்டத்தை வழங்கின. உலக அரங்கில் 30 அறிவியல் ஆய்வு மன்றங்களுடன் தொடர்பில் இருந்தார். "உலகப் புரட்சியாளர் ஐன்ஸ்டீன்', "பூமியின் வயது என்ன', "சூரிய சக்தி' போன்ற நூல்களை வெளியிட்டார். வள்ளல் அழகப்ப செட்டியாரின் வேண்டுகோளை ஏற்று, "கம்ப ராமாயணத்தில் அறிவியல் கூறுகள்' என்ற தலைப்பில் காரைக்குடியில் நீண்ட சொற்பொழிவாற்றினார்.

இன்றும் சென்னைப் பல்கலைக்கழக இலக்கியத் துறையில் முதுநிலைத் தமிழ்ப் பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாண வருக்கு டாக்டர் கே.எஸ்.கிருஷ்ணன் பதக்கம் (விருது) வழங்கப்படுகிறது. 1961-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி இரவு, இயற்பியல் தொடர்பான கட்டுரையை எழுதி முடித்தவுடன் இயற்கை எய்தினார்.

முச்சுருளின் மூலகர்த்தா: இன்று நாம் அனைவரும் அறிந்த சி.டி., எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற மருத்துவ உபகரணங்களின் பயன்பாடுகளுக்கு அடித்தளமிட்டவர் டாக்டர் ஜி.என்.ஆர். (கோபாலசமுத்திரம் நாராயண ராமசந்திரன்).

1922 அக்டோபர் 8-ஆம் தேதி திருநெல்வேலியில் பிறந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் இளநிலை ஆனர்ஸ் படித்த பின்பு, பெங்களூரில் சர் சி.வி.ராமனின் மேற்பார்வையில், 1944-ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் பெற்றார். பிரிட்டனில் இரண்டு ஆண்டுகள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஊடுகதிர் தொடர்பான புதிய கண்டுபிடிப்புக்காக 1949-இல் டாக்டர் பட்டம் பெற்றார். பிறகு நான்கு ஆண்டுகள் சர் சி.வி.ராமன் அறிவியல் நிறுவனத்தில் துணைப் பேராசிரியர் பதவி; 1952-இல் இருந்து 1970 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைத் தலைவராகப் பணிபுரிந்தார்.

அப்போது விலங்குகளின் தோலில் புதைந்துள்ள புரதம் அல்லது கோலஜன் வடிவமைப்பு குறித்த ஆய்வுகள் உலகெங்கிலும் நடைபெற்றன. அமெரிக்காவில் "கோலஜன் ஒற்றைச் சுருள் வடிவம் கொண்டது' என்ற கோட்பாடு நிறுவப்பட்டது. பிரிட்டனில் இது தொடர்பான ஆய்வில் "கோலஜன் வடிவமைப்பு இரட்டைச் சுருள்' என்று கண்டறிந்தனர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் கோலஜன் குறித்து ஆய்வு செய்து "சுருளுக்குள் சுருள்' என்று கண்டறிந்தார் டாக்டர் ஜி.என்.ஆர். இன்றும் கோலஜன் குறித்து ஆய்வு செய்வோர் டாக்டர் ஜி.என்.ஆரின் கண்டுபிடிப்பை, அதாவது ராமசந்திரனின் கோணத்தைப் புறந்தள்ளிவிட்டு ஆய்வு மேற்கொள்ள இயலாது. டாக்டர் ஜி.என்.ஆரின் ஆய்வுச் சட்டகத்தில் ராமசந்திரன் பிஹெச்ஐ/பிஎஸ்ஐ என்று அமைந்துள்ள நிலையான அடிப்படையில்தான் இன்றும் புரதம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

1970-க்குப் பிறகு சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஓராண்டு பணியாற்றினார். அப்போது ஏ.வி.இலக்குமி நாராயணனுடன் இணைந்து "3டி' என்ற முப்பரிமாணப் படங்கள் குறித்து முதன்முதலில் கண்டுபிடித்தார்; பிறகு தாயகம் திரும்பினார்; மறுபடியும் பெங்களுரில் இந்திய அறிவியல் நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

அப்போது கோலஜன் குறித்து பல புதிய செய்திகளைக் கண்டறிந்து வெளிப்படுத்தினார். அத்துடன் கணிதத் தத்துவம், தர்க்கவியல், படிகவியல் குறித்தும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். நடுக்குவாதம் எனும் நரம்புத் தளர்ச்சி நோய் அவரைத் தாக்கியது. 2001-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி தனது 78-ஆம் வயதில் சென்னையில் மறைந்தார்.

அவருடைய வாழ்நாளில் 9 பெலோஷிப்கள், 12 விருதுகளைப் பெற்றார். இவருடைய கண்டுபிடிப்பைப் போற்றும் வகையில் சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள கருத்தரங்கக் கூடத்துக்கு டிரிப்பிள் ஹெலிக்ஸ் (முச்சுருள்) என்று பெயர் சூட்டியுள்ளனர். அவரது கண்டுபிடிப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments