முகப்பு
நூல் அரங்கம்

இந்தீவரம்

கலப்புத் திருமணத்தில் ஆரம்பித்த வாழ்க்கை கரடுமுரடானதாக இருந்தாலும் புரட்சியையும் சமூக மாண்பையும் காத்து பலரது வாழ்க்கையை நிமிர்த்திய சுகுமாரன் தம்பதி மனதில் நிற்கிறார்கள்.

Updated On : 23 மார்ச், 2026 at 12:25 PM
பகிர்:

இந்தீவரம்-குமரித்தோழன்; பக். 318; ரூ.350; காவ்யா வெளியீடு, சென்னை-600 024, ✆ 044-2372 6882.

'இந்தீவரம்' - குவளை மலர் என்றும், நீலோற்பலம் - என்றும் சிற்றிலக்கிய நூல்களில் குறிப்பிடப்படுகிறது. இந்தத் தலைப்பு நாவலின் கதாபாத்திரம் ஒன்றுக்கும் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நாவல் கன்னியாகுமரி மாவட்டத்தின் தென்கோடியில் 25 ஆண்டுகளுக்கு முந்தைய சமூக அமைப்புகளில் உள்ள ஜாதிய ஒடுக்குமுறைகளை உணர்வுபூர்வமாகப் பிரதிபலிக்கிறது.

லட்சியங்களில் ஒன்றிணைந்த சுகுமார், ஐஸ்வர்யா இருவரும் காதலில் வீழ்கின்றனர். உயர் வகுப்பைச் சேர்ந்த நாயகன் தந்தையை எதிர்த்துக் கொள்கைப்பிடிப்புடன், மனிதவேதம், புத்துலகு, மனசாட்சி என்று- மூன்று புத்தகங்கள் கொண்ட தோள் பையுடன் வீட்டை விட்டுக் கிளம்புகிறான்.

இவர்களது திருமணம், பதிவு அலுவலகத்தில் நடைபெற, அதே வேளையில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்த நாயகியின் தந்தையின் கையை எதிரிகள் வெட்டி எடுத்துச் செல்கின்றனர். நாயகியின் வீட்டுக்கும் வைத்த தீயில் தாய் இறக்கிறார்.

ஒரு கட்டத்துக்குள் எதிர்ப்புகாட்டிய சுகுமாரின் தந்தையும் தாயும் அவர்களது குடும்பத்தில் வந்து இணைகின்றனர். கடுமையாக எதிர்த்த அண்ணனும்கூட பிரிதொரு சமயத்தில் இவர்களுடனே வந்து தங்குகின்றான்.

இந்தக் கதையின் ஊடே தென் குமரி மக்களின் வாழ்க்கை முறை, அங்குள்ள சாதிய ஒடுக்குமுறை, அதனால் ஏற்படும் வன்முறைகள். கீழ்த்தட்டு மக்கள் அன்றாடம் பல்வேறு வகையில் படும் அவமானகரமான வசவுகளையும் படிக்கும் வாசகர்களுக்கு அந்தப் பகுதியிலேயே வாழ்ந்த உணர்வை அளிக்கின்றன.

நாவலில் நாயகன் சுகுமாரின் தாய் கொலை செய்யப்படுகிறார். பலரும் பல்வேறு விதமாக சந்தேகம் கொள்கின்றனர். அதை நிகழ்த்தியது யார் என்று அறியும் போது கதாபாத்திரங்கள் போலவே நாமும் அதிர்ச்சியுறுகிறோம். கலப்புத் திருமணத்தில் ஆரம்பித்த வாழ்க்கை கரடுமுரடானதாக இருந்தாலும் புரட்சியையும் சமூக மாண்பையும் காத்து பலரது வாழ்க்கையை நிமிர்த்திய சுகுமாரன் தம்பதி மனதில் நிற்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.