இறைவனைக் காணவும், இறைவனடி சேரவும், முனிவர்களும், மன்னர்களும், மனிதர்களும் பல்வேறு வகையில் படாத பாடுபடுகின்றனர். ஆனால் அப்படிப்பட்ட சிரமங்களே இல்லாமல் தனது திருமணத்துக்கு வருகை தந்தவர்களுக்கெல்லாம் முக்திப் பேறாகிய "கயிலைப் பதவி'யை அளித்தவர் திருஞானசம்பந்தர். அப்படிப்பட்ட வைபவம் நடந்த திருத்தலமாகத் திகழ்வது, நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆச்சாள்புரமாகும். இத்தலத்தின் பெருமைகள் எண்ணிலடங்காதவை.
தலப் பெயர்கள் :
இந்தத் தலம் சிவலோகம், முக்திபுரம், அணவை நல்லூர், திருநல்லூர்ப் பெருமணம், ஆச்சாள்புரம், ஆசார்யாள் புரம், ஆயாள் புரம் என்னும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.
இறைவன் பெயர்: சிவலோகத் தியாகேசர், சிவலோகத் தியாகராஜர், திருப்பெருமணமுடைய மஹாதேவர் ஆகியன. அம்பிகையின் பெயர்: திருவெண்ணீற்றுமை, நங்கை உமை நாயகி, விபூதி கல்யாணி, சுவேத விபூதி நாயகி என்பனவாகும்.
ஆதியில் பிரம்மன் பல தலங்களை வணங்கியவாறு சீகாழிக்குச் செல்லும் வழியில் இத்தலத்தில் உள்ள மூர்த்தி, தலம், தீர்த்தம் முதலியவற்றின் சிறப்புகளையும் வளங்களையும் கண்டார்; "இது ஒரு நல்லூர் ஆகும்' என்று புகழ்ந்தார். அதனால் "நல்லூர்' எனும் பெயரும் இத்தலத்துக்கு ஏற்பட்டது.
இங்குள்ள சிவலோகத் தியாகேசரை முருகப் பெருமான் வழிபட்டுள்ளார். அதனால்தானோ என்னவோ, கந்தனின் அவதாரமாகக் கருதப்படும் ஞான சம்பந்தரும் இவ்வூரில் தனது திருமணத்தை நடத்திக் கொண்டு, அன்றைய தினமே தான் மட்டுமின்றி, தனது கல்யாணக் காட்சி காண வந்த அனைவருக்கும் முக்தி அருளினார்.
எண் தீர்த்தங்களின் சிறப்பு :
நல்லூர் ஆலயத்தைச் சுற்றி கிழக்குத் திசையில் பிருகு முனிவர், தென்கிழக்குத் திசையில் ஆங்கீரச முனிவர், தெற்குத் திசையில் வசிட்ட முனிவர், மேற்கில் வியாச முனிவர், வடமேற்கில் மிருகண்டு முனிவர், வடக்கில் அகத்தியர், ஈசான மூலையில் ஜமதக்கினி மற்றும் கன்னி மூலையில் மந்திரங்கள் அமைத்த தீர்த்தங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றிற்கும் மகத்தான பெருமைகள் உள்ளன. இங்குத் தலமரமாக இருப்பது மாமரமாகும்.
கல்வெட்டுகள் :
இவ்வாலயத்தின் கி.பி. 1918ஆம் ஆண்டு தொல்லியல் ஆய்வறிக்கையின்படி 17 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் பழைமையானது கி.பி. 1121ஆம் ஆண்டு விக்கிரம சோழனின் கல்வெட்டாகும். இது தவிர, இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி. 1133, 1143), இரண்டாம் ராஜாதிராஜன் (கி.பி. 1163, 1177), மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1195, 1202, 1211, 1214), மூன்றாம் ராஜராஜன் (கி.பி. 1218, 1233, 1234) திருபுவன சக்கரவர்த்தி சுந்தர பாண்டியன், கோனேரின்மை கொண்டான் எனப் பல்வேறு மன்னர்களின் கல்வெட்டுகள் ஆலயத்தில் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் இக்கோயிலுக்கு வழங்கப்பட்ட கொடைகள், சலுகைகள் பற்றி விரிவாக அறிய முடிகிறது.
கல்வெட்டுகளில் இறைவன் பெயர் "திருப்பெருமணமுடைய நாயனார்' என்றும், "திருப்பெருமணமுடையார்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வூர் வெண்ணையூர் நாட்டில் உள்ள நல்லூர் என்றும் ஒரு காலத்தில் அழைக்கப்பட்டுள்ளதை கல்வெட்டு வாயிலாக அறிகின்றோம்.
திருஞானசம்பந்தரின் திருமணம் :
சைவம் தழைக்கவும், உலகம் உய்யவும், சீகாழித் திருத்தலத்தில் தோன்றிய திருஞான சம்பந்தர், மூன்று வயதிலேயே அம்பிகையால் ஞானப் பாலூட்டப்பட்டு சிவஞானம் கிடைக்கப் பெற்றவர்.
இறைவனின் அருள்வழியே அடியார்களோடு பல்வேறு சிவத்தலங்கள் சென்று பதிகங்கள் பாடினார் சம்பந்தர். சிவபெருமானிடம் பொற்கிழி, படிக்காசு பெற்றார்; நஞ்சினால் இறந்த வணிகனை உயிர்ப்பித்தார்; திருமறைக்காட்டில் அப்பர் பெருமானோடு சேர்ந்து கோயில் வாயிற் கதவு அடைக்கவும், திறக்கவும் செய்தார்; பாண்டிய நாட்டில் சமணர்களை வாதத்தால் வென்றார்; திருமயிலையில் எலும்பைப் பூம்பாவையாக உயிர்ப்பித்தார்... இப்படிப் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினார்.
இவ்வேளையில் சம்பந்தருக்கு 16 வயது ஆனது. அவரது தந்தையார் சம்பந்தரிடம், ""உனக்குத் திருமணம் செய்ய விரும்புகிறேன். இல்லற வாழ்வில் இருந்து கொண்டு நீ தொண்டு செய்து சிவபெருமானை மகிழ்விக்கலாம்'' என்றார். தந்தையின் சொல்லைத் தட்ட விரும்பாத சம்பந்தர், திருமணத்திற்கு இசைந்தார்.
நல்லூரான ஆச்சாள்புரத்தில் நம்பாண்டார் நம்பி என்பவரின் மகளான "தோத்திர பூர்ணாம்பிகை' என்னும் கன்னிகையை சம்பந்தருக்கு திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டது. சிறப்பான ஏற்பாடுகளுடன் அனைவருக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டன. சம்பந்தரும் தன் உறவினர்களுடன் திருநல்லூர் எழுந்தருளினார்.
தோன்றியது சிவஜோதி :
சம்பந்தரின் திருமணத்தை அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலநக்கர் முறைப்படி நடத்தி வைத்தார். கன்னிகா தானம் முடிந்தபின் மணமக்களை அக்னியை வலம் வர வேண்டினர். சம்பந்தர், "அக்னி வடிவம் அரன் வடிவே' என நினைத்து பெருமானைப் பணிந்தார்; "கல்லூர்ப் பெருமணம்' எனத் தொடங்கும் ஒரு பதிகத்தைப் பாடினார். அப்போது பெருமான், ""இங்கே ஒரு ஜோதி தோன்றும். அதனுள் புகுக'' என்றார். அதன்படியே ஜோதி தோன்றி, அதனுள் புக வாயிலும் தோன்றியது. அனைவரையும், ""அந்த ஒளியுள் செல்க'' என்றார் சம்பந்தர். அதன்படியே திருநீலகண்ட யாழ்ப்பாணர், அவர் மனைவி மதங்க சூடாமணி, திருநீலநக்க நாயனார், முருக நாயனார், சிவபாத இருதயர், பகவதியார், நம்பாண்டார் நம்பி தம்பதியர், காகபுசுண்டர், பல்லக்கு தூக்குவோர், திருமணத்தில் கலந்து கொண்டோர், வேடிக்கை பார்த்தவர்கள், வேறு பணிக்கு வந்தவர்கள் என அனைவரும் அவ்வொளியில் புகுந்தனர்; வான் கயிலையாகிய சிவ பதத்தை அடைந்தனர்.
அனைவரும் உள்ளே புகுந்த பின் திருஞானசம்பந்தர், உயிருக்கு உறுதி தரும் பதிகமான ""காதலாகிக் கசிந்து'' என்னும் பதிகத்தை பாடியவாறு, தன்னுடைய துணைவியார் தோத்திர பூர்ணாம்பிகை எனும் சொக்கியாரின் கையைப் பிடித்தபடி சிவ ஜோதியில் புகுந்தார். உடனே ஜோதியும் வாயிலும் மறைந்தன. இந்த வைபவம் நிகழ்ந்த நன்னாள் வைகாசி மாதம், மூல நட்சத்திர தினமாகும். (திருஞான சம்பந்தர் திருமணப் பெருவிழா, நாளது ஜூன் 8-ம் தேதியன்று இரவு 7.00 மணியளவில் நடைபெறுகின்றது. மறுநாள் ஜூன் 9ம் தேதியன்று அதிகாலை 4.00 மணிக்கு சிவஜோதி தரிசனம் நடைபெறும். வாய்ப்புள்ளவர்கள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு குருவருளும், திருவருளும் பெறுக.)
மேலும் தலவரலாற்றின்படி, அந்த ஜோதியைக் கண்டு பலர் அஞ்சி ஓடினார்கள் என்றும், இறைவனின் ஆணைப்படி நந்தியெம்பெருமான் அவர்கள் பின்சென்று அவர்களை அழைத்து வந்தார் என்றும், அந்த ஜோதியில் கலந்து கொண்ட எல்லோருக்கும் அம்பிகை திருநீறு வழங்கினாள் என்றும் கூறப்படுகிறது. இதையுணர்த்தும் வகையில் அம்பிகைக்கு திருவெண்ணீற்றுமையம்மை, விபூதி கல்யாணி என்ற பெயர்களும் வழங்குகின்றன.
இவ்வாறு நந்தியெம்பெருமான் சென்று திரும்பிய இடம் "ரிஷபத் துரத்தி' என்றும், அவர் பாய்ந்து சென்ற இடம் "நீறூரி ரிஷப தீர்த்தம்' என்றும் அழைக்கப்படுகின்றன.
நிர்வாகம் :
இத்திருக்கோயில் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமானதாகும். இது அவர்களால் சிறப்புடன் பரிபாலிக்கப்பட்டு வருகிறது.
ஆலய அமைப்பு :
இவ்வாலயம் கிழக்கு நோக்கியவாறு ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சித் தருகின்றது. எதிரே பஞ்சாட்சரத் திருக்குளம் பிரம்மாண்டமாய் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தை அடுத்து முற்றத்தில் நந்தி மண்டபமும் நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன. நூற்றுக்கால் மண்டபத்தில் திருஞானசம்பந்தர், தோத்திர பூர்ணாம்பிகையோடு மணக்கோலத்தில் தனி சந்நிதியில் அருள் வழங்குகின்றார். அவரை தரிசித்து உள்ளே நுழைந்ததும், கிழக்கு நோக்கியவாறு சிவலோகத் தியாகராஜர் சந்நிதியும், திருவெண்ணீற்று உமையம்மையின் சந்நிதியும் அமைந்துள்ளன. அம்பிகை சந்நிதியிலும் இங்கு திருநீறு மட்டுமே பிரசாதமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இத்தலத்தின் மற்றொரு சிறப்பு, சுவாமி சந்நிதியின் பின்புறம் அமைந்துள்ள "ருண விமோசனர்' சந்நிதியாகும். இவரை வழிபடுவோரின் கடன் தொல்லைகள் நீங்குவதால் ஏராளமான மக்கள் இங்கு வந்து தரிசித்து நல்வாழ்வு பெறுகின்றனர்.
அமைவிடம் :
நாகை மாவட்டம், சீகாழி வட்டத்தில் ஆச்சாள்புரம் அமைந்துள்ளது. சீகாழியிலிருந்து வடகிழக்கே 13 கி.மீ., சிதம்பரத்திலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ. தொலைவில் நல்லூர் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.