ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழா: நாளை தேரோட்டம்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழா இம் மாதம் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழா இம் மாதம் 1-ம் தேதி கொடியேற்றத்துடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8.05 மணிக்கு நடைபெறுகிறது.
பூமிப்பிராட்டியாம் ஸ்ரீஆண்டாளின் திருஅவதார தினமான ஆடிப்பூர நன்நாளைக் கொண்டாடும் விதமாக ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டு ஆகஸ்டு 1-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் புறப்பாடு நடைபெற்ற பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான 9-ம் தேதி காலை 8.05 மணிக்கு நடைபெறுகிறது. அன்றைய தினம் வெளிநாடுகளில் இருந்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை மாவட்ட நிர்வாகம் விரிவாக செய்துள்ளது.
ஐந்தாம் திருநாளான 5-ம் தேதி இரவு ஐந்து கெருட சேவை நடைபெற்றது. ஸ்ரீஆண்டாள் பெரிய அன்னவாகனம், ஸ்ரீரெங்கமன்னார், ஸ்ரீபெரிய பெருமாள், ஸ்ரீசுந்தரராஜன், ஸ்ரீதிருவேங்கடமுடையான், ஸ்ரீதிருத்தங்கால் அப்பன் ஆகிய எம்பெருமாள்கள் பெரிய திருவடி (கெருட) வாகனங்களிலும், ஸ்ரீபெரியாழ்வார் சிறிய அன்னவாகனத்திலும் எழுந்தருளினர். இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
7-ம் திருநாளான 7-ம் தேதி இரவு கிருஷ்ணன் கோவிலில் சயன சேவை நடைபெற்றது. ஸ்ரீஆண்டாள் திருமடியில் ஸ்ரீரெங்கமன்னார் சயனத் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை கோயில் தக்கார் தொழிலதிபர் கி.ரவிச்சந்திரன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்துள்ளார்கள். மேலும் விழா நாட்களில் கோயில் முன்பு உள்ள பிரமாண்டமான பந்தலில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், உபதேசங்கள் நடைபெறுகிறது.