முகப்பு
ஆன்மிகம்

"கங்கா ஆரத்தி': வாராணசியில் பக்தர்கள் திரண்டனர்!

நவராத்திரி விழாவையொட்டி வாராணசி நகரில் 9 தினங்களும் கங்கை நதிக்கரையில் நடைபெறும் கங்கா ஆரத்தியைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான மக்கள் திரண்டனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:55 AM
பகிர்:

நவராத்திரி விழாவையொட்டி வாராணசி நகரில் 9 தினங்களும் கங்கை நதிக்கரையில் நடைபெறும் கங்கா ஆரத்தியைக் காண நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான மக்கள் திரண்டனர்.

இந்த ஆண்டு நவராத்திரி விழா செப்டம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, பக்தர்கள் பலரும் நவராத்திரி விரதம் இருந்தனர். நவராத்திரியையொட்டி வாராணசியின் பல இடங்களிலும் பிரம்மாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு, பலவித வடிவங்களில் துர்கையின் சிலைகள் பக்தர்களின் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இரவில் வண்ண மின்விளக்குகளுடன் அலங்கரிக்கப்பட்டிருந்த பந்தல்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். கடைசி மூன்று தினங்கள் நகரப் பகுதியில் இப்பந்தல்களில் பக்தர்கள் அதிகளவில் அம்மனை தரிசித்துச் சென்றதாக பூஜை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். குறைந்தபட்சம் ரூ.1 லட்சத்திலும், அதிகபட்சம் ரூ.15 லட்சத்திலும் பல்வேறு பகுதிகளில் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்ததாக நகரவாசி அசோக் திவாரி தெரிவித்தார்.

இவ்விழாவையொட்டி நகரின் பிரதான பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று நாள்களிலும் அதிகமாக இருந்தது. அருள்மிகு காசி விஸ்வநாதர், அன்னபூரணி, விசாலாட்சி உள்ளிட்ட ஆலங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

நதிக் கரையில் நிரம்பி வழிந்த கூட்டம்: கங்கை நதிக் கரையின் பிரதானப் படித்துறைகளில் மாலை 6.30 மணிக்குத் தொடங்கி இரவு. 7.30 மணி வரை கங்கா ஆரத்தி நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. பக்தர்களின் பாவங்களைப் போக்கி, அருள்பாலித்து வரும் கங்கை மாதாவுக்கு ஆரத்தி எடுத்து ஆராதனை செய்யும் இந்நிகழ்வைக் காண இந்த ஆண்டு நவராத்திரியின் அனைத்து நாள்களிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். நதிக்கரை முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இந்நிலையில், நவராத்திரி நாள்களிலும், விஜயதசமியான வெள்ளிக்கிழமையும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.