ஆதியான வேதங்களில் இருந்து ஹோமங்கள் தோன்றின. வேதங்களில் கர்மகாண்டத்தில் ஹோமங்களை எப்படி செய்வது என்றும் அப்படி செய்வதால் உண்டாகும் பலன்கள் பற்றியும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. உடனடியாகப் பலன்களை எதிர்பார்ப்பவர்களும், அவசியம் பரிகாரம் செய்து கொள்ள வேண்டியவர்களும் ஹோமங்கள் செய்து அதன் மூலம் பலன் பெறலாம் என்பது பெரியோர் வாக்கு.
நவகிரகங்களின் அசைவினால், பெயர்ச்சியால் ஏற்படும் தீமைகளையும் இதனால் மனிதர்கள் படும் துன்பங்களையும் பார்த்த மகரிஷிகள், கிரகங்கள் தோஷங்களை நீக்கப் பல பரிகார ஹோமங்களை உருவாக்கினார்கள். உரிய விதிமுறைகளின்படி இந்த பரிகார ஹோமங்கள் செய்யப்படும் போது மந்திர பலத்தால் நவக்கிரகங்களினால் ஏற்படும் தோஷங்கள் விலகி நன்மைகள் நடைபெறும் என்பது மகரிஷிகள் அறிந்து, அறிவித்து உண்மை.
மேலும் கலியுகத்தில் மற்ற வழிபாட்டு முறையை விட ஹோமங்கள் மூலம் மனம் ஒன்றுபட்டு இறைவனை வழிபடுவதே சிறப்பானதாகக் கருதப்படுகின்றது. அதுபோலவே, பரிகாரங்கள் செய்வதற்கும் இதர பூஜை முறைகளை விட ஹோமங்கள் செய்வதும், செய்விப்பதும், அவற்றில் பங்கேற்பதம் உடனடியாக பலன் தரும் வழியாக உள்ளது.
கிரகங்களின் பெயர்ச்சி காலம்
நவக்கிரகங்களின் நாயகனான சூரியன் மாதம் ஒருமுறை ஒரு இராசியில் இருந்து மற்றொரு இராசிக்குச் செல்கிறார். சந்திரம் 2 1/4 நாட்களில் ஒரு இராசியில் இருந்து அடுத்த இராசிக்குச் செல்கிறார். செவ்வாய் சராசரியாக 1 1/2 மாதம் ஒரு இராசியில் சஞ்சரிப்பார். புதன், சுக்கிரன் இருவரும் ஒரு இராசியில் ஒரு மாதம் சஞ்சரிப்பார்கள். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு இராசியில் இருந்து அடுத்த இராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். சனீஸ்வரன் இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை ஒரு இராசியில் இருந்து அடுத்த இராசிக்குப் பெயர்ச்சிஆகிறார். இராகு, கேது இருவரும் சராசரியாக 1 1/2 வருடங்களுக்கு ஒருமுறை ஒரு இராசியை விட்டு அடுத்த இராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள்.
இந்நிலையில் வரும் 05.07.2015 அன்று குருபகவான் கடக இராசியில் இருந்து சிம்ம இராசிக்குப் பிரவேசிக்க இருக்கிறார். சுப கிரகங்களில் குருவின் பெயர்ச்சியும் பாப கிரகங்களில் சனியின் பெயர்ச்சியும் பக்தர்களால் பெரிதும் கவனிக்கப்படுகிறது. ஆலயங்களில் இந்த பெயர்ச்சிகளை பெரும் விழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஜோதிடர்கள் இந்தந்த கிரகங்களின் பெயர்ச்சியினால் இந்தந்த இராசிக்காரர்களுக்கு நன்மைகள் விளையும் என்றும் இந்தந்த இராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என்றும் பலன்களை கணித்துச் சொல்கிறார்கள்.
இந்தப்பெயர்ச்சிகளுக்கு பரிகாரமாக ஜோதிடர்கள் அந்தந்த கிரகங்களின் சாந்தித்தியம் உள்ள ஆலயங்களுக்குச் சென்று பரிகாரங்கள் செய்து கொள்ள பரிந்துரைக்கின்றனர்.
பரிகாரம் என்ன?
ஏழை, எளியவர்களுக்கு உதவுவது, ஊனமுற்றவர்களுக்கு உதவுவது, வசதியில்லாத குழந்தைகளின் கல்விக்கு உதவுவது, திருக்கோயில் திருப்பணிக்கு நிதி உதவி செய்வது, ஆலயங்களில் திருவிளக்கு ஏற்றி வழிபடுவது ஆகியவை கிரக தோஷங்களுக்கு மிகச் சிறந்த பரிகாரங்கள் என ஆன்றோர்கள் சொல்லியுள்ளனர். அந்தந்த கிரகங்களின் விசேஷ சாந்தித்தியம் உள்ள கோயில்களில் சிறப்பு அர்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்கள் செய்து வழிபடுவது பரிகாரம் செய்ய ஒரு வழியாகும். ஆனாலும் எல்லாரும் பரிகார ஹோமங்கள் செய்து வழிபடுவது என்பது இயலாத ஒன்று. எனவே, நவக்கிரகங்களுக்குப் பரிகார ஸ்தலமாக விளக்கி வரும் திட்டை அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் குரு கிரகப் பெயர்ச்சி நன்மை தர ஐந்து நாட்கள் பரிகார ஹோமங்கள் நடைபெற உள்ளன.
கிரகங்கள் வழிபட்டு வரம் பெற்ற திருக்கோயில்
திட்டை, அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலுக்கு வந்து வழிபடாத தெய்வங்களும், தேவர்களும் இல்லை எனலாம். முழுமுதற் கடவுளான கணபதி முதல் பாலமுருகன் வரை இங்கு வந்து வழிபட்டு வரம் பெற்றுள்ளனர். தேவர்களின் இந்திரன் முதற்கொண்டு அசுவினி தேவர்கள் வரை வசிஷ்டேஸ்வரரை வழிபட்டும் வரம் பெற்றும் சென்றுள்ளனர். தர்ம தேவதையான எமன் இங்கு வந்து தன் சாபம் நீங்கப் பெற்றுள்ளார். நவகிரகங்களின் நாயகனான சூரியன் இத்தல இறைவனை வணங்கி கிரக நாயகனாக உயர்வு பெற்று, உலகை ஒளியால் பிரகாசப்படுத்தும் சக்தியையும் பெற்று பிரபஞ்சத்தின் நாயகனாக விளங்கி வருகிறார்.
சந்திரனுக்கும் ஒருமுறை அவர் மாமனார் தட்ச பிரஷாபதியால் சாபம் வந்தது. அச்சாபத்தினால் அவர் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழிந்து போகும் நிலை ஏற்பட்டது. திங்களூர் வந்து வழிபட்ட சந்திரனை சிவன் தன் தலையில் சூடி அவர் சாபம் நீங்க உதவினார். அதற்கு நன்றிக்கடனை சந்திரன் திட்டையில் வந்து செலுத்தினார். எப்படியென்றால், திட்டை மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. அக்கல் காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி தூய்மையான நீராக மாற்றி ஒரு நாளிகைக்கு (24 நிமிடங்கள்) ஒருமுறை வசிஷ்டேஸ்வரருக்கு நித்யாபிஷேகம் செய்கிறார். காலம் காலமாக நடந்து வரும் இந்த அதிசய அபிஷேகத்தை திட்டையில் இன்றும் காணலாம். நவக்கிரகங்களில் சுப கிரகம் குருபகவான். பாப கிரகங்களின் சக்தியால் ஏற்படும் தீயபலன்களை தன் பார்வை பலத்தால் கட்டுப்படுத்தி பக்தர்களுக்கு நற்பலன்களை வாரி வழங்கும் இயல்புடையவர். அத்தகைய குருவானவர் சுவாமிக்கும், அம்பாளுக்கும் ,இடையில் தனி சந்நிதியில், தனி விமானத்துடன் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலிக்கும் தலம் திட்டை ஆகும். பாப கிரகங்களில் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் அச்சம் தருபவர் சனீஸ்வர பகவான். அத்தகைய சனி பகவானுக்கும் ஒரு சமயம் சாபம் வந்தது. தன் சாபம் நீங்கவும், தனக்கு ஒரு அங்கீகாரம் வேண்டியும் சனி பகவான் திட்டைக்கு வந்து வசிஷ்டேஸ்வரரை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் கடுந்தவம் புரிகிறார். அவர் தவத்துக்கு இரங்கிய சிவபெருமான் அவர் முன் தோன்றி அவருக்கு வந்த சாபத்தை நீக்கி நவக்கிரகங்களில் ஒருவராக அமர்த்தினார். அது முதல் சனிபகவான் இக்கோயிலில் மங்கள மூர்த்தியாக இருந்து அனுக்கிரகம் செய்து வருகிறார்.
இராகு, கேது போன்ற சாயா கிரகங்கள் எனப்படும் நிழல் கிரகங்களுக்கெல்லாம் இராஜாவாக விளங்கியும் பரந்தாமனின் பாம்புப்படுக்கையாகவும் விளங்கி வரும் ஆதிசேஷன் ஆயிரம் தலைகளையும், பூவுலகைத் தாங்கும் திறனையும் திட்டைக்கு வந்து வழிபட்டு பெற்றார் என்று தலவரலாறு கூறுகிறது. இப்படி இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபட்டு வரம்பெற்றோர் ஏராளம்! ஏராளம்!
இத்தைய சிறப்பு மிக்க இக்கோயிலில் 05.07.2015 அன்று நடைபெறவுள்ள குருபெயர்ச்சியை முன்னிட்டு பலன் தரும் பரிகார ஹோமங்கள் 15.07.2015 முதல் 19.07.2015 வரை ஐந்து நாட்கள் வேத விற்பன்னர்களைக் கொண்டு வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. நேரில் வர முடிந்தவர்கள் இலட்ச்சார்ச்சனைக்கு கட்டணம் ரூ.300/-, குரு பரிகார ஹோம கட்டணம் ரூ.500/- செலுத்தி இந்த பரிகார ஹோமங்களில் பங்கு பெறெலாம். நேரில் வர முடியாதவர்கள் இலட்ச்சார்ச்சனைக்கு கட்டணம் ரூ. 300/-, பரிகார ஹோமத்திற்கு ரூ.500/- மணி ஆர்டர் அல்லது டி.டி எடுத்து நிர்வாக அதிகாரி அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், திட்டை, தஞ்சாவூர் மாவட்டம் - 613 003 என்ற முகவரிகக்கு தங்கள் நட்சத்திரம், இராசி லக்னம் ஆகிய முழு விபரங்களுடன் தங்களுடைய சரியான முகவரியையும் அனுப்பினால் அவர்களுக்கு ஹோமத்தில் சங்கல்பம் செய்து பிரசாதம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
இந்த பிரசாதத்துடன் குருபகவான் உருவம் பொறித்த 2 கிராம் வெள்ளி டாலர், குருபகவான் படம், ஹோமம் அஞ்சனம்(மை), தோஷம் நீக்கும் மஞ்சள் கயிறு ஆகியவை அனுப்பி வைக்கப்படும்.
இக்கோயிலில் எளிய முறையில் அனைத்து பக்தர்களும் நேரடியாக சங்கல்பம் செய்து பரிகாரம் செய்து கொள்ளும் வகையில் ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. இதன் சிறப்பை உயர்ந்து அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் திட்டைக்கு வந்து ஹோமங்கள் செய்துபலன் பெறுகிறார்கள். நேரில் வந்த இந்த பரிகார ஹோமங்களில் பங்கு கொண்டவர்கள் பாக்கியவான்கள் வர முடியாதவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.
தொலைபேசி எண்கள்: 04362-252858, 9443445864
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.