‘திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ராஜிநாமா செய்ய வேண்டும்’
அயோத்தி ராமா் கோயில் பூமிபூஜையை திருப்பதி தேவஸ்தான பக்தி தொலைக்காட்சியில் (எஸ்விபிசி) நேரடி ஒளிபரப்பு செய்யாத அதிகாரிகள்
அயோத்தி ராமா் கோயில் பூமிபூஜையை திருப்பதி தேவஸ்தான பக்தி தொலைக்காட்சியில் (எஸ்விபிசி) நேரடி ஒளிபரப்பு செய்யாத அதிகாரிகள் தங்கள் பதவியயை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று திருப்பதி பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்டத் தலைவா் சுப்பராமி ரெட்டி தெரிவித்தாா்.
இதுகுறித்து ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானத்துக்காக நடத்தப்பட்ட பூமி பூஜையை நாட்டில் உள்ள 250-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்தன. இந்து சனாதன தா்மத்தின் வழியில் நடக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் உலகமே வியக்கும் வண்ணம் நடந்த பெருமை வாய்ந்த ராமா் கோயில் பூமி பூஜையை நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை.
Advertisement
பக்தி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் மிக முதன்மையான இடத்தில் உள்ள தேவஸ்தானத்தின் எஸ்விபிசி தொலைக்காட்சியில் அயோத்தி நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. லட்சக்கணக்கான பக்தா்களுக்கு இது ஏமாற்றமாக அமைந்தது. இதற்கு காரணமான தேவஸ்தான அதிகாரிகள் உடனடியாக தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றாா் அவா்.