பரிகாரத் தலங்கள்

பதவி, ஊதிய உயர்வு பெற குரு பரிகாரத் தலம் திட்டை கோயில்

தினமணி

அது ஒரு மகா பிரளய காலம். பிரளயத்தின் முடிவில் ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகம் தோன்ற வேண்டும். பூமியெங்கும் மழை வெள்ளமென கொட்டியது. உயிரினங்கள் அழிந்தன.

ஆனால், அவ்வளவு வெள்ளப் பெருக்கிலும் பூலோகத்தின் ஒரு பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் திட்டாக நின்றது. காரணம் அங்கு இறையருள் இருந்தது. அந்தத் தலமே தென்குடித் திட்டை என்கிற திட்டை. பேரூழிக் காலத்திலும் பெரு வெள்ளத்திலும் மூழ்காத திட்டை தலம் ஓர் அதிசயமே.

திட்டை திருத்தலத்தில் இறைவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அம்பாள் எழுந்தருளியுள்ளார்.

அம்மன் சன்னதிக்கு மேலே மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக் கட்டங்கள் விதானத்தில் செதுக்கப்பட்டுள்ளன. அந்தந்த ராசிக்காரர்கள் தங்கள் ராசியின் கீழ் நின்று அம்மனை வழிபடும்போது அம்மன் தோஷம் நீங்க அருளுகிறார். பெண்களுக்கு ஏற்படும் திருமணத் தடை, மாங்கல்ய தோஷம் நீங்க இந்த அம்மன் அருளுவதால் மங்களாம்பிகை எனப் புகழப்படும் உலகநாயகி இரண்டாவது அதிசயம்.

கோயில் முகப்பில் உள்ள ராஜகோபுரம்

மும்மூர்த்திகளின் மாயையை நீக்கி அவர்களுக்கு வேத, வேதாந்த சாஸ்திர அறிவையும், ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய 3 தொழில்களையும் செய்ய உரிய சக்தியையும் ஞானத்தையும் அருளினார். மும்மூர்த்திகளும் வழிபட்டு வரம் பெற்றது மூன்றாவது அதிசயம்.

மூலவர் வசிஷ்டேசுவரர் விமானத்தில் சந்திர காந்தக் கல், சூரிய காந்தக் கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளன. இறைவனுக்கு மேலே உள்ள சந்திர காந்தக் கல் காற்றிலிருந்து ஈரப்பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்கிறது. 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இன்றும் காணலாம். உலகில் வேறு எந்த ஒரு சிவன் கோயிலிலும் காண முடியாத அற்புதம் இது. இந்த கோயிலில் அமைந்துள்ள நான்காவது அதிசயம் இது.

இந்தத் திருக்கோயிலின் நான்கு மூலைகளிலும் 4 லிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஐந்தாவது லிங்கமாக மூலவராக ராமனின் குல குருவான வசிஷ்டர் பூஜித்த வசிஷ்டேசுவரர் உள்ளார். எனவே, இது பஞ்சலிங்க தலமாக உள்ளது. பஞ்சபூதங்களுக்கும் தனித்தனியே பாரதத்தில் தலங்கள் உண்டு. ஆனால், ஒரே கோயிலில் பஞ்ச பூதங்களுக்கும் 5 லிங்கங்கள் அமைத்திருப்பது ஐந்தாவது அதிசயம்.

திட்டைத் தலத்தில் சிவன், உமை, விநாயகர், முருகன், குரு, பைரவர் ஆகிய அறுவரும் தனித்தனியே அற்புதங்கள் நிகழ்த்தித் தனித்தனியாக வழிபடப்பட்டுத் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். எனவே, பரிவார தேவதைகளைப் போல அல்லாமல் மூலவர்களைப் போலவே அருள்பாலிப்பது ஆறாவது அதிசயம்.

பெரும்பாலான கோயில்கள் கருங்கல்லாலும், பழைமையான ஆலயங்கள் சில செங்கற்கல்லாலும் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால், கொடி மரம், விமானங்கள், கலசங்கள் ஆகிய அனைத்தும் கருங்கற்களினால் உருவாக்கப்பட்டிருப்பது திட்டையில் மட்டுமே. உலகில் வேறு எங்கும் இத்தகைய கோயில் அமைப்பு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, இது ஏழாவது அதிசயம்.

கோயில் மண்டபம்

பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்ட பைரவர் பல தலங்களுக்கும் சென்று தோஷம் நீங்கப் பெறாததால் திட்டைக்கு வந்து வசிஷ்டேசுவரரை ஒரு மாதம் வரை வழிபட்டு வந்தார்.

வசிஷ்டேசுவரர் அவர் முன் தோன்றி உன் தோஷம் முடிந்துவிட்டது என்றும், நீ திட்டைத் திருத்தலத்தின் கால பைரவனாக எழுந்தருளி உன்னை வழிபடுவோருக்கு அருள் செய்வாய் எனக் கூறினார். அப்போது முதல் இந்தத் தலம் பைரவ க்ஷேத்திரமாக விளங்கி வருகிறது. இங்கு எழுந்தருளியுள்ள பைரவர் எட்டாவது அதிசயம்.

இந்தக் கோயிலில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் இடையே எங்கும் இல்லாத சிறப்போடு நின்ற நிலையில் ராஜ குருவாக குரு பகவான் அருள்பாலித்து வருகிறார். இவருக்கு ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழாவும், அதையொட்டி லட்சார்ச்சனையும், குருபரிகார ஹோமங்களும் நடைபெற்று வருகின்றன. இங்கு எழுந்தருளியுள்ள ராஜ குரு பகவான் ஒன்பதாவது அதிசயம்.

வசிஷ்டேசுவரர்

இத்தகைய சிறப்புகள் பெற்ற இத்தலம் தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. தென்குடித் திட்டை என்கிற இத்தலத்தை திட்டை என்றே அழைக்கின்றனர். திட்டை என்றால் மேடு எனப் பொருள்.

வசிஷ்டேசுவரர்

இங்கே உள்ள சிவலிங்கத் திருமேனி, சுயம்பு மூர்த்தம். சுவாமி தான்தோன்றீசுவரர். தானே தோன்றித் தன் இருப்பை வெளிப்படுத்தியவர். சுயம்பு மூர்த்தமாக சிவபெருமான் தோன்றிய சிவத் தலங்களில் 22 ஆவது திருத்தலம் தென்குடித் திட்டை.

இத்தலத்தில் சுயம்பு மூர்த்தம் என்பதால், தானே தோன்றியவர் என்பதால், ஸ்ரீசுயம்பூதேசுவரர் என்ற திருநாமமும் ஈசனுக்கு உண்டு. வசிஷ்ட மகரிஷி தவமிருந்து வழிபட்டதால், ஸ்ரீவசிஷ்டேசுவரர் என்றும், பசுக்கள் வணங்கி வழிபட்ட தலம் என்பதால், பசுபதீசுவரர் எனவும் அழைக்கப்படுகிறார் சிவபெருமான். என்றாலும், தற்போது ஸ்ரீவசிஷ்டேசுவரர் கோயில் என்றே மக்கள் அழைக்கின்றனர்.

ஸ்ரீசுகந்த குந்தளேசுவரி

இதேபோல, அம்பாளுக்கு ஸ்ரீலோகநாயகி, ஸ்ரீசுகந்த குந்தளேசுவரி, ஸ்ரீமங்களேசுவரி, ஸ்ரீமங்கலநாயகி போன்ற பெயர்கள் இருக்கின்றன.

ராஜ குருவாக குரு பகவான்

ஜோதிட சாஸ்திர அடிப்படையில் பார்த்தால், நவக்கிரகங்களில் சூரியனே ராஜா. சந்திரன் ராணி. செவ்வாய்க் கிரகம் சேனாதிபதி என்றும், புதன் இளவரசர் எனவும் அழைக்கப்படுகிறார். குரு பகவான் ராஜ மந்திரி என்பதால் ராஜ குருவாக தரிசிக்கப்படுகிறார். எனவே, திட்டையில் குரு பகவானை ராஜ குருவாக பக்தர்கள் வழிபடுகின்றனர்.

கோயில் கருவறையில் இருக்கிற தெய்வத்தின் பெயரைக் கொண்டே கோயிலும் அழைக்கப்படுவது வழக்கம். ஆனால், மக்களின் மனதில் பரிவாரத் தெய்வமாகத் திகழ்பவரும் பதிந்துவிடுகிறார். அவரே அக்கோயிலின் நாயகனாகத் திகழ்ந்து, கோயிலின் பெருமையை உலகுக்கு உணர்த்துவார். இப்படிப் பரிவாரக் கடவுளே பரிகார மற்றும் பலன் தரும் தெய்வமாகவும் வழிபடக் கூடிய கோயில்களும் இருக்கின்றன. இக்கோயிலில் மக்கள் மனதில் இடம் பிடித்த குரு பகவானே முதன்மையான தெய்வமாக வழிபடப்படுகிறார். தமிழகத்தில் குரு பகவான் குடி கொண்டு அருள் பாலிக்கும் முக்கியமான தலங்களில் திட்டையும் ஒன்று.

பாடல் பெற்ற தலம்

திருஞான சம்பந்தர் தேவாரப் பதிகத்தில் இந்தத் தலத்தைக் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார். எனவே, பாடல் பெற்ற திருத்தலம் என்ற பெருமையைப் பெறுகிறது திட்டை. ஞானபூமியாக, வருவோருக்கு ஞானம் தரும் தலமாகத் திகழும் தென்குடித் திட்டையை வேதங்கள் போற்றும் தலம் என்றும், வேதங்கள் வணங்கும் தலம் எனவும் பாடுகிறார் திருஞானசம்பந்தர்.

சக்கரத் தீர்த்தக் குளம்

எம பயம் நீங்கும்

தென்குடித் திட்டைக்கு வந்து எவர் வேண்டி வணங்கினாலும், அவர்களுக்கு எம பயம் விலகிவிடும். அவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வர் என்பது ஐதீகம்.

மகாலிங்கம்

சிறு வயது முதலே நோயால் அவதிப்படுபவர்கள், மருந்து, மாத்திரைகளை நாள்தோறும் உட்கொள்பவர்கள், எப்போதும் ஏதேனும் ஒரு நோயால் அவதிக்கு ஆளாபவர்கள் இக்கோயிலுக்கு வந்து சிவனாரையும், தேவியையும் வஸ்திரம் சாத்தி வேண்டிக்கொண்டால் போதும். குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, முடிந்தால் பரிகார ஹோமமும் செய்து வழிபட்டால் நோய் நொடியின்றி சகல வளத்துடன் வாழலாம். ஆயுள் பலம் பெருகி ஆரோக்கியத்துடன் வாழ்வர்.

பதவி உயர்வு நிச்சயம்

எதிர்ப்புகளாலும் சூழ்ச்சிகளாலும் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கப் பெறாதவர்கள் இந்தத் தென்குடித் திட்டை தலத்துக்குச் சென்று குறைகளைக் கூறி சிவனிடம் வேண்டிக் கொள்ளலாம். அப்படியே குரு பகவானிடம்  வேண்டிக் கொண்டு, குரு பலத்தையும் பெற்றால், நினைத்தபடி பதவி, ஊதிய உயர்வு பெற்று அமோகமாக வாழ்வர். ஆத்மார்த்தமாக சிவனாரையும், தேவியையும் வேண்டினால் இழந்த பதவியைப் பெற்று இனிதே வாழலாம்.

கோயில் மண்டபம்

இக்கோயிலில் காலை 7 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும், வியாழக்கிழமைகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

கோயிலை தொடர்பு கொள்ள 04362 - 252858.

கருங்கல்லில் செய்யப்பட்ட கொடி மரம்

எப்படிச் செல்வது?

தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள இக்கோயிலுக்கு மெலட்டூர், திருக்கருகாவூர் செல்லும் பேருந்துகள் திட்டை வழியாக இயக்கப்படுகின்றன. அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. தஞ்சாவூர் - கும்பகோணம் இருப்புப் பாதையில் பயணிகள் ரயிலில் ஏறிச் சென்றால் திட்டை ரயில் நிலையத்தில் இறங்கியும் இக்கோயிலுக்குச் செல்லலாம். விமானத்தில் செல்பவர்கள் திருச்சி விமான நிலையத்திலிருந்து இக்கோயிலுக்கு கார் மூலம் வரலாம்.

படங்கள்: தேனாரமுதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT