பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் 
பரிகாரத் தலங்கள்

புதன் பலவீனமா? தோஷமா?ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். என்ன சொல்கிறார்?

திருவெண்காடு புதன் பரிகாரத் தலத்தைப் பற்றி ஜோதிட வல்லுநர் ஏ.எம். ராஜகோபாலன் தெரிவித்திருப்பது பற்றி..

ஏ.எம். ராஜகோபாலன்

காசிக்குச் சமமானதாகக் கருதப்படும் ஆறு தலங்களுள் நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள திருவெண்காடும் ஒன்றாகும். சமயக் குரவர்கள் நால்வராலும் பாடப் பெற்ற சிறப்புமிக்க திருத்தலமாகும். சிவபெருமானின் 64 மூர்த்தங்களுள் ஒன்றாகிய ஸ்ரீ அகோர மூர்த்தியைக் கண்டு தரிசிக்கலாம். தில்லையில் ஆடுவதற்கு முன் ஆடல்வல்லான் திருவெண்காட்டில் ஆடியதால் இதனை "ஆதி சிதம்பரம்" என்றழைப்பர். 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும். அதுமட்டுமின்றி நவக்கிரக தலங்களில் புதன் தலமாகவும் விளங்குகிறது.

சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் இந்திரன், ஐராவதம், சிவப்பிரியர், வேதராசி, சுவேதகேது, சுவேதன், விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் வழிபட்டுள்ளனர். பதினோராம் திருமுறை பாடிய திருவெண்காடு பட்டினத்தடிகள் சிவதீட்சை பெற்ற தலம் இதுவாகும். பன்னிரு சூத்திரங்களைக் கொண்ட 'சிவஞான போதம்' என்னும் சைவ சித்தாந்த முழு முதல் நூலை அருளிச் செய்த மெய்கண்டார் அவதரித்த தலமும் இதுவே. இத்தலத்தில் செய்யும் ஒரு தர்மம், கோடிக்கு இணையாவதால் 'தருமகோடி' என்றும் சித்திகளை அருளுவதால் 'சித்திநகர்' என்றும் போற்றப்படுகிறது.

சிவகாம சுந்தரி சமேத நடராஜர்

திருவெண்காடர், திருவெண்காடு தேவர், திருவெண்காடுடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டுப் பெருமான் என்றழைக்கப்படும் இவரே இத்தலத்தின் நாயகன். சுயம்பு மூர்த்தமாக லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். திருவெண்காடரின் சக்தியாகப் பிரம்மவித்யாம்பாள் என்னும் பெரியநாயகி எழுந்தருளியுள்ளார். கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றைத் தரவல்ல புத பகவான் இத்தலத்தில் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

புத பகவான்

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட திருவெண்காடு (புதன்) பரிகாரத் தலம் பற்றித் தினமணி வெள்ளிமணியில் புகழ்பெற்ற ஜோதிட வல்லுநர் ஏ.எம். ராஜகோபாலன் என்ன சொல்லியிருக்கிறார்...

''ஆறு மாதங்களுக்கு முன்பு வரை மிகவும் நன்றாகப் படித்து வந்தவன். இப்போது படிப்பில் சிறிதும் அக்கறையின்றி ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவன் மீண்டும் பழையபடி திருந்துவானா?

- ஒரு பெற்றோரின் புலம்பல் இது.

“பேரனே எனக்குப் பேரானந்தம்! ஆனால் படிக்க மாட்டேன் என்கிறானே அவன்! எப்பொழுது பார்த்தாலும் கிரிக்கெட் மட்டையும், பந்தும்தான் அவள் கையில், அவன் எதிர்காலம் என்ன ஆகும்? தாத்தாவின் பொங்கி வரும் பாசம்!

ஜாதகத்தை எடுத்து, அதில் புதனைப் பாருங்கள், இதற்கான விடை கிடைத்துவிடும்.

சௌபாக்கிய துர்க்கை

சகல கலைகளையும், உயர்ந்த கல்வியையும், விவேகத்தையும் அளிப்பதால் 'வித்யாகாரகன்" என ஜோதிடக் கலை, புதனைப் போற்றுகிறது.

வாக்குவன்மை, பேச்சினாலேயே பிறரை வசீகரிக்கும் திறன், பண்பு, பொறுமை, கணிதம், ஜோதிடம், சிற்பம், பன்மொழிப் புலமை ஆகியவற்றைத் தந்தருளும் புதன், முக்தித் தலங்களில் முதன்மையான காசியில், சிவபெருமானை லிங்க வடிவமாகப் பிரதிஷ்டை செய்து பூஜித்ததன் பலனாக, நவக்கிரகங்களில் ஒருவராகத் திகழும் பேறு பெற்றார், மருத்துவம், மருந்துகள் ஆகியவற்றிற்கும் புதனே அதிபதி. ஆதலால், "ஔஷதகாரகன்'' எனவும் இவரை ஜோதிடம் புகழ்கிறது.

சுவேத மகாகாளி

வானவெளியில், மயில் தோகையின் நீலமும், பச்சையும் கலந்த வண்ணத்தில் ஒளிர்விட்டுப் பிரகாசிக்கும் புதன், கிரகங்களில் மிகவும் அழகு வாய்ந்த கிரகம் ஆவார்.

குழந்தைகளுக்கு எத்துறையில் கல்வி பயில்வித்தால், அவர்கள் மனம் படிப்பில் ஈடுபடும்; சிறந்த எதிர்காலம் அமையும் என்பதை நிர்ணயிப்பதற்கு, ஜாதகத்தில் புதனின் நிலை மிக, மிகச் சரியாக உதவும்.

பெண்களானாலும், பிள்ளைகளானாலும், அவர்கள் மனம் ஈடுபடாத அல்லது லயிக்காத துறையை வற்புறுத்தி நிர்பந்தித்து அவர்கள் மீது திணிப்பதைவிட, ஜாதகத்தில் புதனின் பலம், பலஹீனம் ஆகியவற்றைக் கண்டறிந்து அதன்படி முடிவெடுப்பதே விவேகமாகும். இதேபோன்று, விவாகத்திற்கு வரனை நிர்ணயிப்பதிலும், புதனின் நிலை மிக மிக உதவும். புதனின் நிலையினால் பெண், பிள்ளை ஆகியோரின் சுபாவம், அறிவுத்திறன் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

அகோர மூர்த்தி

எந்தக் குழந்தையின் ஜாதகத்தில் புதனுக்குப் பலஹீனம் அல்லது தோஷம் அல்லது தோஷக் கிரகங்களின் சேர்க்கை அமைந்துள்ளதோ, அவர்களுக்குக் கல்வியில் தடங்கல்கள் ஏற்படும். அத்தகைய ஜாதகர்கள், புதன் பரிகாரத் திருத்தலமாகிய திருவெண்காடு சென்று புதன் வழிபட்ட ஸ்ரீ ஸ்வேதாரண்யேஸ்வரரையும், ஸ்ரீ பிரம்ம வித்தியாம்பிகையையும் தரிசித்து, பின்பு அங்கு எழுந்தருளியுள்ள புதனையும் வழிபட்டுத் திரும்புவது, புதன் தோஷத்திற்குச் சக்தியுள்ள பரிகாரமாகும்.

அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சைவ சமய மகாபுருஷர்களால் பாடல்பெற்ற அரிய தலம் திருவெண்காடு. சிறு வயதிலேயே உலக சுகங்களைத் துச்சமெனத் தள்ளிவிட்டுத் துறவியான பட்டினத்தடிகளுக்கு முக்திக்கு வழிகாட்டிய திவ்ய திருத்தலம், இது புதனின் தோஷத்தையும், பலஹீனத்தையும் உடனுக்குடன் போக்கும் சக்தி கொண்ட தலமும் ஆகும். திருவெண்காடு சென்று புதனின் சன்னதியில் அமர்ந்து 1008 முறை கீழ்க்கண்ட துதியைப் பாராயணம் செய்து பயனடையுங்கள்.

'ப்ரியங்கு கலிகாஸ்யாமம் ரூபேணாப்ரதிமம் புதம்

ஸௌம்யம் ஸௌம்ய குணாபேதம்

தம்புதம் ப்ரணமாம்யஹம்!

- மகாபாரதத்தில் ஸ்ரீ வியாஸ பகவான்

எப்படிச் செல்வது?

சென்னையில இருந்து 254 கி.மீ. தூரத்திலும், விழுப்புரத்திலிருந்து 267 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது திருவெண்காடு. சென்னையில் இருந்து சீர்காழிக்குச் சென்றால், அங்கிருந்து ஏராளமான அரசுப் பேருந்துகள் உள்ளன.

சீர்காழியிலிருந்து 14 கி.மீ. தூரத்திலும், மயிலாடுதுறையிலிருந்து 26 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ள திருவெண்காடு புதன் கோயிலுக்கு சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் நகரப்பேருந்துகளில் செல்லலாம்.

மயிலாடுதுறையிலிருந்து நாங்கூர் செல்லும் பேருந்து, மங்கைமடம் செல்லும் பேருந்து, பெருந்தோட்டம் செல்லும் பேருந்துகளும் திருவெண்காட்டின் வழியாகச் செல்கின்றன.

(மீள்பிரசுரம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரந்தர் படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7 லட்சம் பேர் விண்ணப்பம்!

வரம் தரும் வாரம்!

ரிசர்வ் வங்கியில் கிரேடு 'சி' பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் 125ம் ஆண்டு திருவிழா!

SCROLL FOR NEXT