செய்திகள்

மகா சிவராத்திரி:: திருத்தணி முருகன் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

DIN

மகா சிவராத்திரியை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில், 1,008 சங்காபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருத்தணி முருகன் மலைக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு காலபூஜைகள் மற்றும் 1008 சங்காபிஷேகம் நடந்தது. மாலை 6 மணிக்கு மூன்று யாக சாலை அமைத்து கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு முதற்கால சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.
இரவு, 10 மணிக்கு இரண்டாம் கால அபிஷேகம், சிறப்புப் பூஜை, 1,008 சங்காபிஷேகமும், 11 மணிக்கு மூலவருக்கு மூன்றாம் கால சிறப்பு அபிஷேகம், பூஜையும் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் கோயில் நடை திறந்திருந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிவன் கோயில்களில்...
திருத்தணி பழைய தர்மராஜாகோயில் தெருவில் உள்ள சதாசிவலிங்கேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு 108 பால்குட ஊர்வலம் நடந்தது. மதியம் 12 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இரவு முழுவதும் பக்தி கச்சேரி, பரத நாட்டியம், நான்கு கால அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதேபோல், திருத்தணி நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள வீரட்டீஸ்வரர் கோயிலில் மாலை 6 மணிக்கு முதற்கால அபிஷேகம் தொடங்கியது.
திருத்தணி அடுத்த லட்சுமாபுரம் கிராமத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் தரிசித்த சிவன் கோயிலில், வெள்ளிக்கிழமை காலை, 6 மணிக்கு அபிஷேகம், மதியம் 1 மணிக்கு உச்சி கால பூஜை, மாலை, 4.30 மணிக்கு, 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT