செய்திகள்

கோயில்களில் மகா சிவராத்திரி விழா

தினமணி

மகா சிவராத்திரியையொட்டி, செங்கல்பட்டை சுற்றியுள்ள சிவாலயங்களில் வெள்ளிக்கிழமை விடிய விடிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
செங்கல்பட்டு, அண்ணா நகர் எல்லையம்மன் கோயிலில் உள்ள யோகநாதேஸ்வரருக்கு முதல் கால பூஜை 6 மணிக்கு தொடங்கப்பட்டு, அண்ணாமலையார் வேதகிரீஸ்வரருக்கு பல்வேறு அபிஷேக, அலங்காரங்கள் மற்றும் 7 கால பூஜைகள் நடைபெற்றன. இதேபோல, வ.உ.சி. தெருவில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.
செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஏ.வி.என். மஹாலில் செங்கல்பட்டு ஆன்மிகக் குழுவினர் சார்பில், சிவலிங்கம் வைத்து மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இதில் சிவபெருமான், மருந்தீஸ்வரர் அலங்காரத்தில் காட்சியளித்தார். முன்னதாக, செங்கல்பட்டு வேதாசல நகரில் இருந்து ஊர்வலம் நடைபெற்றது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட மருந்தீஸ்வரரை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
இதேபோல, பெரியந்தம் காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் உள்ள கைலாசநாதர் கோயிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது.
மேலும், அண்ணா நகரில் உள்ள ரத்தினவிநாயகர் கோயில், மேட்டுத் தெருவில் உள்ள செங்கழுநீர் விநாயகர் கோயில், அனுமந்தபுரம் அகோரவீரபத்திர சுவாமி கோயில், வல்லம் வேதாந்தேஸ்வரர் கோயில், புலிப்பாக்கம் வியாகரபுரீஸ்வரர் கோயில், திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் கோயில், சாஸ்திரம்பாக்கம் வடவைத்தீஸ்வரர் கோயில், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில், பக்தவசலேஸ்வரர் கோயில், ருத்ரகோட்டீஸ்வரர் கோயில், திருப்போரூர், செம்பாக்கம் ஜம்புகேஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் 7 காலபூஜைகள், அபிஷேக, அலங்காரங்கள் நடைபெற்றன.
இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

தர்மேஸ்வரர் கோயிலில் 10,008 தீப வழிபாடு

குன்றத்தூர் ஒன்றியம், மணிமங்கலம் ஊராட்சியில் பழைமையான வேதாம்பிகை உடனுறை தர்மேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, 10,008 தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். தர்மேஸ்வரர், வேதாம்பிகை, தட்சிணாமூர்த்தி, கால பைரவர், சனீஸ்வரர் ஆகிய சந்நிதிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
சென்னை ஆத்யலஷ்மி அரங்கமேளா பரதநாட்டியக் குழு சார்பில் பரத நாட்டியம் நடைபெற்றது. இதையடுத்து இரவு 10.30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் ஒரு மணிக்கு மூன்றாம் கால பூஜை, 4 மணிக்கு நான்காம் கால பூஜையுடன் விழா நிறைவடைந்தது.
இதில் மணிமங்கலம், சேத்துப்பட்டு, மலைப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல, மணிமங்கலம் பகுதியில் ஸ்ரீபெரும்புதூர்-கரசங்கால் சாலையில் உள்ள சதுர்வேத விநாயகர் மற்றும் சுயம்பீஸ்வரர் கோயில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, 108 தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது.

அம்மன் கோயிலில் மயான சூறை

ஒதப்பை அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி, மயான சூறை விழா விமரிசையாக நடைபெற்றது.
பூண்டியை அடுத்த ஒதப்பை கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி (பூங்காவனத்தம்மன்) உடனுறை ஓங்காட்டீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் சிவராத்திரி, மயான சூறை நிகழ்ச்சி 5 நாள்கள் நடைபெறும்.
அதன்படி, கடந்த 22-ஆம் தேதி அன்று கிராம தேவதையான தன்யாவனத்தம்மனுக்கு பொங்கல் இடுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. மறுநாள் அம்மனுக்கு காப்பு கட்டுதல், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை இரவு அங்காளபரமேஸ்வரி உடனுறை ஓங்காட்டீஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நான்காம் நாளான சனிக்கிழமை காலையில் மகா சிவராத்திரி நிறைவடைந்ததை தொடர்ந்து சிவபெருமான் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதியுலா வந்தார். பின்னர், மாலை 4 மணிக்கு அங்காள பரமேஸ்வரி மயான சூறை நடைபெற்றது.
இதையொட்டி, இன்னிசை கச்சேரி, நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதில் ஒதப்பை, ஆட்ரம்பாக்கம், பூண்டி, மைலாப்பூர், சீத்தஞ்சேரி, திருவள்ளூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், கிராம பொதுமக்கள், கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

SCROLL FOR NEXT