செய்திகள்

மன நிம்மதியைத் தரும் பச்சை போடுதல் நேர்த்திக் கடன்!

DIN


கீழத்தஞ்சாவூர் என்றழைக்கப்பட்ட தற்போதைய திருவாரூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து 18 கி.மீ. தொலைவிலும் நாச்சியார்கோயிலிருந்து 6 கி.மீட்டர் தூரத்திலும் பிலாவடி என்ற கிராமத்தில் முடிகொண்டான் ஆற்றங்கரையில் சோலையின் நடுவே சித்தாடியில் ஸ்ரீ காத்தாயி அம்மன் அருள்பாலித்து வருகிறாள். இவளை காத்யாயினி என்றும் கூறுகின்றனர். இங்கு, ஸ்ரீ பச்சைவாழி அம்மன் பிரதான தெய்வமாக நடுநாயகமாக அமைந்துள்ளாள். ஆனால் காத்தாயி அம்மன் பலருக்கு குலதெய்வமாக விளங்குகிறாள். தினைப்புனம் காத்தவளே காத்தாயி அவளே வள்ளி என்கின்றனர்.

அமுதவல்லி, சுந்தரவல்லி ஆகிய இரு பெண்கள் முருகப்பெருமானையே திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்று முருகனை நோக்கி சரவணப் பொய்கையில் அமர்ந்தபடி தவம் செய்தனர். அகமகிழ்ந்த முருகன் தான் சூரனை சம்ஹாரம் செய்வதற்காக ஒரு வைராக்யத்துடன் வந்திருப்பதால் தற்போது மணக்க இயலாது; அவனை வதம் செய்தபின் தக்க சமயத்தில் இருவரையும் மணந்து கொள்வதாக வாக்களித்தான். 

அமுதவல்லி தேவலோகம் சென்று இந்திரனிடம் தன்னை மகளாக ஏற்றுக் கொள்ள வேண்டினாள். அவனோ ஐராவத யானையிடம் ஒப்படைத்து பாதுகாப்பாக வளர்க்கச் சொன்னான். யானை வளர்த்ததால் அவள் தேவயானை என பெயர் பெற்றாள். பின் முருகனை மணக்கிறாள்.

பூவுலகில் ஸ்ரீமன் நாராயணன், ஒரு சாப விமோசனத்திற்காக முனிவராக பிறந்திருந்தார். அப்போது லக்ஷ்மிதேவி நாராயணனை தேடி அங்கு வந்த அவர் முன் நின்றாள். தேவியைப் பார்த்த நாராயணனுக்கு தன் நிலை உணரப்பெற்று பின் கூடினர். இதன் காரணமாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையை அங்குள்ள வள்ளிச்செடியின் கீழ் போட்டுவிட்டு தம்பதியினர் வைகுண்டம் சென்றனர். குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கானகத்தின் அரசன் நம்பிராஜன் தன் மகளாக எடுத்து வந்து வளர்த்தான். வள்ளி பருவம் அடைந்ததால் வேடர்குல வழக்கப்படி தினைக்காட்டின் நடுவே ஒரு பரணியில் அமரவைத்து அவளை தினைப்புனத்தை காக்கப் பணித்தனர். அதனால் காத்தாயி எனப் பெயர் பெற்றாள். ஒரு நல்ல நாளில் திருமணமும் முருகபெருமானுடன் நடந்தேறியது. 

தஞ்சையை ஆண்ட நாயக மன்னன், துறவி ஒருவருக்கு சித்தாடி கிராமத்தை தானமாக தந்து இந்த காத்தாயி அம்மன் கோயிலைக் கட்டித் தந்ததாக ஒரு வரலாறு கூறுகிறது.  பல உள்நாட்டு, வெளிநாட்டிலுள்ள குடும்பங்களுக்கு குலதெய்வமாக இந்த காத்தாயி அம்மன் திகழ்கிறாள். ஒவ்வொரு வருடமும் அவர்கள் அனைவரும் தன் குடும்பத்தினருடன் வந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து மாவிளக்கு போடுவதோடு, பச்சை போடுதல் என்ற நேர்த்திக் கடனையும் செலுத்தி தன் நன்றியை காணிக்கையாக்கி மன நிம்மதி அடைகின்றனர். 

இந்த பச்சைப் போடும் வேண்டுதல் பக்தர்கள் அனைவராலும் செய்ய இயலாது. ஏனெனில் பெரிய செலவாகும். இதற்கென்று உள்ள பெரிய தொட்டி போன்ற பாத்திரத்தில் சுமார் 50 கிலோ அரிசி சாதம் பக்தியோடு சமைக்கப்பட்டு அதில், அனைத்து வகை காய்கறிகள், வெற்றிலை பாக்கு, பழங்களை அதைச்சுற்றி வைத்து தீபம் ஏற்றப்படும். ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தபின் கோயில் அர்ச்சகருடன் பூசாரியும் இணைந்து அனைவரையும் வெளியில் செல்லச் சொல்லி தனியாக அம்மனுக்குப் படைப்பார்கள். சிறிது நேரம் கழிந்தபின் அனைவரையும் சந்நிதியின் உள்ளே வரச்சொல்லி, தீப ஆராதனையுடன் இந்த வைபவம் முடிவுறும்.  

இது கோயில் சார்பாக தை மாத வெள்ளிக்கிழமையில் சண்டி ஹோமம் நிறைவடைந்தபின் செய்வார்கள். வேண்டுதல் செய்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.  இந்த ஆடி மாத அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் இவ்வாலயத்தில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகிறது.  

கும்பகோணம் - நன்னிலம் மார்க்கத்தில் நாச்சியார்கோயில் குடமுருட்டி ஆற்றுப்பாலம் கடந்து,  இடதுபுறம் சென்றால் பிலாவடி கூட்டு ரோடு வரும். அங்கிருந்து சித்தாடி ஆலயத்தை எளிதாகச் சென்றடையலாம்.  

தொடர்புக்கு:   94445 70389/ 96556 45310.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT